உலகம்

“இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஊக்கமளிக்கிறது” - நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன்

மோகன் கணபதி

ஆக்லாந்து: பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்தியாவில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்றும், இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஊக்களிக்கின்றன என்றும் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஜூலை 10) நியூசிலாந்து சென்றார். இரண்டாம் நாளான இன்று இரு தலைவர்களும் தூதுக்குழுவினருடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், பாதுகாப்பு, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம், சுற்றுலா, விளையாட்டு, பேரிடர் மேலாண்மை ஆகிய ஐந்து துறைகளில் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அப்போது பேசிய நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன், “நான் நீண்டகாலமாகவே இந்தியாவின் தீவிர ரசிகன். நான் எனது 20களின் மத்தியில் இந்தியாவுக்குச் சென்றேன். அங்கு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்த்தேன். இந்துஸ்தான் லீவர் என்ற அந்த நிறுவனம் இந்தியாவின் டாப் 10 நிறுவனங்களில் ஒன்று. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அப்போதெல்லாம் மக்களுக்கு பெரும்பாலும் தினிக்கூலிதான் வழங்கப்படும். நாணயங்களாக அவை இருக்கும். ஆனால், இன்று அங்கு ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைப் பார்க்கும்போது ஊக்கமளிப்பதாகவும் உற்சாகம் அளிப்பதாகவும் உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்தியாவில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், தற்போது இந்தியாவில் நடுத்தர வர்க மக்களின் எண்ணிக்கை 44 கோடியாக உயர்ந்துள்ளது. வரும் 2030க்குள் இது 75 கோடியாக உயர இருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடியை நியூசிலாந்தில் வரவேற்பது எங்களுக்கு கிடைத்த ஒரு சிறப்பான கவுரவம். கடந்த 40 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் நியூசிலாந்துக்கு வருவது இதுவே முதல்முறை. உங்கள் வருகை உண்மையிலேயே வரலாற்றுச் சிறப்புமிக்கது. நியூசிலாந்தும் இந்தியாவும் தங்கள் உறவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்கின்றன என்ற ஒரு தெளிவான செய்தியை இது வெளிப்படுத்துகிறது.

பிரதமர் மோடி அவர்களே, உங்கள் தலைமையின் கீழ் இந்தியா உலகின் மிக வேகமாக வளரும், மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக மாறியுள்ளது. பரப்பளவு, புத்தாக்கம், லட்சியம், சர்வதேச செல்வாக்கு ஆகியவற்றுக்கு பெயர்பெற்ற இந்தியா, ஒரு முக்கிய புவிசார் அரசியல் சக்தியாகவும், இந்தோ - பசிபிக் கூட்டாளியாகவும் திகழ்கிறது” என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT