ரூவேன் அசார்

 
உலகம்

“ஈரான் போர் நீடிக்க வாய்ப்பு” - இஸ்ரேல் தூதர் ரூவேன் அசார் கருத்து

வேட்டையன்

புதுடெல்லி: ஈரான் போர் நீடிக்க வாய்ப்பு உள்ளதாக இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவேன் அசார் தெரிவித்துள்ளார். ஈரானின் பாதுகாப்புக் குழுவின் செயலாளர் அலி லாரிஜானி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ள நிலையில் ரூவேன் அசார் இதை கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.

இது தொடர்பாக முன்னணி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் ரூவேன் அசார் கூறியதாவது: “ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. நாளுக்கு நாள் அது அதிகரித்து வருகிறது. இந்த தாக்குதல் காரணமாக ஈரானின் ராணுவ பலம் பெரிய அளவில் குறைந்துள்ளது. மேலும், ஈரானில் மாற்றம் வரும் வரை போர் நீடிக்க வாய்ப்புள்ளது.

          

பல தசாப்தங்களாக ஈரானுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சிகள் நடந்தது. ஈரானின் அணு ஆயுத சோதனை, ஏவுகணை கட்டமைப்பு மற்றும் பிராந்திய அளவிலான ஆயுத குழுக்களுக்கு அளிக்கப்படும் ஆதரவு என பேசினோம். அது அனைத்தும் தோல்வி அடைந்தது. இந்த தாக்குதலை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா என இரண்டும் இணைந்துதான் முன்னெடுத்தன. இந்த போரை நீண்ட காலம் கொண்டு செல்ல வேண்டுமென நாங்கள் விரும்பவில்லை. இருந்தாலும் கள சூழல்தான் அதை முடிவு செய்யும்” என்றார்.

கடந்த மாதம் ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் இணைந்து தாக்குதல் மேற்கொண்டன. இந்த தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஈரான் மக்கள் உயிரிழந்தனர். தங்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரின் முடிவு எப்படி இருக்கும் என உலக நாடுகள் எதிர்பார்த்துள்ளன. ஏனெனில், இந்த போர் காரணமாக ஆசிய அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT