உலகம்

பாகிஸ்தான் ராணுவ தளபதியுடன் ஈரான் வெளியுறவு அமைச்சர் பேச்சுவார்த்தை

இஸ்லாமாபாத் விரைகிறது அமெரிக்க குழு!

மோகன் கணபதி

இஸ்லாமாபாத்: ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, பாகிஸ்தான் ராணுவத் தளபதி பீல்டு மார்ஷல் அசிம் முனீரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி முதல் அமெரிக்​கா, ஈரான் இடையே போர் நடை​பெற்று வந்​தது. கடந்த 8-ம் தேதி இருதரப்பு இடையே போர் நிறுத்​தம் அமல் செய்​யப்​பட்​டது. இந்த இரு வார போர் நிறுத்​தம் கடந்த 23-ம் தேதி​யுடன் நிறைவடைந்​த நிலையில், கால​வரை​யின்றி போர் நிறுத்தத்தை நீட்​டிப்​ப​தாக அன்​றைய தினம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறி​வித்​தார்.

போர் காரண​மாக ஹார்​முஸ் ஜலசந்​தியை ஈரான் ராணுவம் மூடி​யுள்​ளது. இதே​போல இந்த ஜலசந்​தி​யின் இரு​புற​மும் அமெரிக்க போர்க்​கப்​பல்​கள் நிறுத்​தப்​பட்டு உள்ளன. இந்தச் சூழலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில், “காலம் கடந்து சென்று கொண்​டிருக்​கிறது. ஈரான் தரப்பு விரைந்து முடிவு எடுக்க வேண்​டும்’’ என்று எச்​சரித்​திருந்தார்.

அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்​பந்​தத்தை இறுதி செய்ய பாகிஸ்​தான் தீவிர முயற்சி செய்து வரு​ம் நிலையில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, பாகிஸ்தான் ராணுவத் தளபதி பீல்டு மார்ஷல் அசிம் முனீரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பாகிஸ்தான் வந்த பிறகு அவர் மேற்கொண்ட முதல் அதிகாரப்பூர்வ சந்திப்பு இதுவாகும். இந்த சந்திப்பை அடுத்து, பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தர்-ஐ அப்பாஸ் அராக்சி சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சந்திப்பின்போது ஈரான் தரப்பில் துணை வெளியுறவு அமைச்சர் காசிம் கிரபாபாடி, தூதர் ரெசா அமிரி மொகாதம், வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். பாகிஸ்தான் தரப்பில் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பின்போது, அமைதிக்கான அமெரிக்காவின் நிபந்தனைகள் விஷயத்தில் ஈரானின் பதிலை அராக்சி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. முன்னதாக அவர் வெளியிட்ட ஒரு எக்ஸ் பதிவில், “ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே எந்த சந்திப்பும் நடைபெற திட்டமிடப்படவில்லை. ஈரானின் கருத்துக்கள் பாகிஸ்தானுக்கு தெரிவிக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.

இதனிடையே, ஈரானுடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்காக மத்திய கிழக்குக்கான அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காப், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் ஆலோசகர் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் பாகிஸ்தானுக்குப் புறப்படுவார்கள் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “அதிபர் ட்ரம்ப் எப்போதும் ராஜதந்திரத்துக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க விரும்புகிறார். அதுவே அவரது முதல் தேர்வாக எப்போதும் இருக்கிறது. இங்கும் இதையே அவர் செய்ய விரும்புகிறார்” என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT