உலகம்

ஈரானில் அதிபரை ஓரங்கட்டி ஆதிக்கம் செலுத்தும் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை

வெற்றி மயிலோன்

தெஹ்ரான்: உச்ச தலைவர் மொஜ்தபா காமேனியின் இருப்பிடம் குறித்து தெளிவு இல்லாத நிலையில், இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை(IRGC) ஈரான் மீதான தனது கட்டுப்பாட்டை மேலும் வலுப்படுத்தியுள்ளது. ஈரான் அதிபரை ஓரங்கட்டிவிட்டு, இப்போது ஐஆர்ஜிசியே மிக முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளை எடுப்பதாகவும் சொல்லப்படுகிறது

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள், மிதவாத போக்குகொண்ட நியாயமான தலைவர்களுடன் நடைபெற்று வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்த வாரத் தொடக்கத்தில் கூறியிருந்தார். எனினும், ஈரான் இதனை மறுத்துள்ளது. இது, ஈரானின் உண்மையில் யார் அதிகாரத்தில் இருக்கிறார்கள் என்பது குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

          

அதிபர் மசூத் பெசெஷ்கியனுடனான அதிகாரப் போட்டியின் காரணமாக, இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) இப்போது ஈரானில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதாக ‘ஈரான் இன்டர்நேஷனல்' என்ற ஊடகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கத் தாக்குதல்களுக்கு எதிரான ஈரானின் ராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் ஐஆர்ஜிசி, இப்போது நாட்டின் முக்கிய நிர்வாகச் செயல்பாடுகளின் கட்டுப்பாட்டைத் தன்வசம் வைத்துள்ளது என்று 'ஈரான் இன்டர்நேஷனல்' தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

போரின் முதல் நாளிலேயே, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியும், பல உயர்மட்டத் தலைவர்களும் கொல்லப்பட்டனர். அதன்பின்னர் அயத்துல்லா அலி காமேனியின் மகனான மொஜ்தபா, புதிய உச்ச தலைவராக அறிவிக்கப்பட்டார். எனினும், அதன் பிறகு மொஜ்தபா பொதுவெளியில் தென்படவோ அல்லது பேசவோ இல்லை. அவரிடமிருந்து வருவதாகக் கூறப்படும் செய்திகள் அனைத்தும், தொலைக்காட்சியில் அறிக்கைகளாக மட்டுமே வாசிக்கப் படுகின்றன.

இதனால் மொஜ்தபா உயிரிழந்திருக்கக்கூடும் என்ற ஊகங்களும் எழுந்துள்ளது. எனினும், உச்ச தலைவர் தற்போது கோமா நிலையில் இருக்கக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மொஜ்தபா மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கலாம் என்று ட்ரம்ப் கருத்துத் தெரிவித்துள்ள நிலையில், அவர் முகம் சிதைந்த நிலையில் இருப்பதாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத் கூறியுள்ளார்.

இதனால் ஈரானில் ஒரு அரசியல் வெற்றிடம் உருவாகியுள்ளதால், ஐஆர்ஜிசி முழுமையாக அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த அறிக்கையின்படி, ஐஆர்ஜிசியின் மூத்த அதிகாரிகளைக் கொண்ட ஒரு ராணுவக் குழு இப்போது நாட்டின் அன்றாட நிர்வாக முடிவுகளை எடுத்து வருகிறது. சொல்லப்போனால், மொஜ்தபாவைச் சுற்றி ஒரு மிகக் கடுமையான பாதுகாப்பு வளையத்தை அமைத்துள்ளதாகவும், நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த அரசாங்கத்தின் அறிக்கைகள் கூட அவரைச் சென்றடையாதவாறு தடுக்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரான் அதிபர் பெசெஷ்கியன், நாட்டின் உச்ச தலைவரைச் சந்திப்பதற்காக ஐஆர்ஜிசி-யிடம் மீண்டும் மீண்டும் விடுத்த கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களாக ஈரானின் தற்போதைய தலைமைக்கும், மொஜ்தபாவுக்கும் இடையே எவ்விதத் தொடர்பும் இல்லை எனவும் சொல்லப்படுகிறது.

SCROLL FOR NEXT