உலகம்

"நாங்கள் முடிக்க வேண்டிய வேலை ஒன்று உள்ளது" - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை

டெக்ஸ்டர்

டெஹ்ரான்: ஈரானின் அச்சுறுத்தல்களை முடிவுக்குக் கொண்டுவருவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விடுத்த எச்சரிக்கைக்கு ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்களது அதிர்ஷ்டத்தை மீண்டும் ஒருமுறை சோதித்துப் பார்க்கட்டும் என்று சவால் விடுத்துள்ள அவர், ஈரானுக்கும் முடிக்க வேண்டிய வேலை மிச்சம் இருப்பதாகக் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேல் தேர்தலில் நெதன்யாகுவை ஆதரித்துப் பதிவிட்ட கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக கருத்தை அவர் தெரிவித்துள்ளார். முன்பு ஒருமுறை ஈரான் மீது தாக்குதல் நடத்த முயன்றபோது, ஈரான் முன்பைவிட மிகவும் வலிமையாக உருவெடுத்ததாக தெரிவித்த அராக்சி, மீண்டும் தங்களது அதிர்ஷ்டத்தை சோதித்துப் பார்க்க வருமாறு தெரிவித்துள்ளார்.

மேலும், உள்நாட்டு நெருக்கடிகள் மற்றும் சிறைத் தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காகவே நெதன்யாகு அமெரிக்காவை மற்றொரு போருக்குள் தள்ளி வருவதாகவும், இதன் விளைவுகள் குறித்து அவர் சிறிதும் கவலைப்படவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார். இஸ்ரேல் தேர்தலில் நெதன்யாகுவின் தலைமையை ஆதரித்துள்ள ட்ரம்ப், ஈரான் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அவர் போன்ற ஒரு உறுதியான தலைவர் மட்டுமே இஸ்ரேலுக்குத் தேவைப்படுவதாகத் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, அமெரிக்காவிடம் ஈரான் முன்வைத்த ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பான 7 நாட்கள் ஒப்பந்த முன்மொழிவு இன்னும் பரிசீலனையில் உள்ளதாக அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். அமெரிக்கா தங்கள் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால், ஆறு நாட்களுக்குள் ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் என்றும், ஏழாவது நாளில் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மறுபுறம், வாஷிங்டன் போஸ்ட் - ஏபிசி நியூஸ் மற்றும் இப்சோஸ் இணைந்து நடத்திய புதிய கருத்துக் கணிப்பில், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பணி குறித்த ஒப்புதல் மதிப்பீடு 33 சதவீதமாகச் சரிந்துள்ளதும், பிரதிநிதிகள் சபையைக் கைப்பற்றும் போட்டியில் குடியரசுக் கட்சியை விட ஜனநாயகக் கட்சியினர் 8 புள்ளிகள் முன்னிலையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT