உலகம்

‘ஈரான் போர் 2 அல்லது 3 வாரங்களில் நிறைவு’ - அமெரிக்க மக்களிடம் உரை நிகழ்த்துகிறார் ட்ரம்ப்

வெற்றி மயிலோன்

வாஷிங்டன்: ஈரானுடனான போர் 2 அல்லது 3 வாரங்களில் முடிவடையும் என ட்ரம்ப் தெரிவித்த நிலையில், ஈரான் குறித்த ஒரு முக்கியத் தகவலைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் ட்ரம்ப் புதன்கிழமை இரவு 9:00 மணிக்கு (இந்திய நேரப்படி வியாழன் காலை 6:30 மணி) நாட்டு மக்களிடம் உரையாற்றுவார் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “அமெரிக்கப் படைகள் மிக விரைவில் ஈரானில் இருந்து வெளியேறும். அது ஒருவேளை இரண்டு வாரங்களுக்குள்ளோ அல்லது மூன்று வாரங்களுக்குள்ளோ நிகழக்கூடும்.

ஆனால், நாங்கள் இந்த வேலையை முடித்துக் கொண்டிருக்கிறோம். அவர்களிடம் உள்ள ஒவ்வொரு விஷயத்தையும் நாங்கள் தகர்க்க விரும்புகிறோம். அதற்கு முன்பே நாங்கள் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளவும் வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தார்.

          

இதற்கிடையில், ஈரான் குறித்த ஒரு முக்கியத் தகவலைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் ட்ரம்ப் புதன்கிழமை இரவு 9:00 மணிக்கு (இந்திய நேரப்படி வியாழன் காலை 6:30 மணி) நாட்டு மக்களிடம் உரையாற்றுவார் என்று வெள்ளை மாளிகை அறிவித்தது.

உலகப் பொருளாதாரத்தை ஆட்டம் காணவைத்துள்ள ஈரானுடனான போரை, அமெரிக்கத் தரைப்படைகளை அனுப்புவதன் மூலம் தீவிரப்படுத்த திட்டமிடுகிறதா அல்லது பேச்சுவார்த்தைகள் மூலம் அதை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிக்கிறதா என்பது குறித்து ட்ரம்ப் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி வருகிறார்.

முன்னதாக, ஈரானுடனான போர் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் முடிவடையக்கூடும் என்றும், எண்ணெய் போக்குவரத்துக்கு மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்கும் பொறுப்பு மற்ற நாடுகளையே சாரும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று (மார்ச் 31) தெரிவித்தார்.

மற்றொரு முக்கிய நிகழ்வாக, ஈரானுக்கு எதிரான கூட்டு நடவடிக்கை மத்திய கிழக்கின் முகத்தையே மாற்றிவிட்டது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

அதேவேளையில், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு தேவையான மனவுறுதி ஈரானிடம் இருப்பதாகவும், ஆனால் போர் மீண்டும் வெடிக்காது என்று எதிரி நாடுகள் உத்தரவாதம் அளித்தால் மட்டுமே அது சாத்தியம் என்றும் அந்நாட்டின் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கூறினார்.

லெபனானில் தெற்கு பெய்ரூட் மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஏழு பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் புதன்கிழமை (ஏப்ரல் 1) அதிகாலையில் தெரிவித்தது. அதேவேளையில், ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி ஒருவரைத் தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது.

ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பிற்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் நடவடிக்கைகளால் லெபனானில் 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 10 லட்சத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT