உலகம்

ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்தத்தில் பாகிஸ்தான் மத்தியஸ்தம் பலன் கொடுத்தது எப்படி?

வேட்டையன்

இஸ்லாமாபாத்: மேற்காசியாவில் தீவிரமாக நடைபெற்ற போரை இடைக்காலமாக நிறுத்த ஈரானும் அமெரிக்காவும் சம்மதித்துள்ளன. இதன் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளது. இதை அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டாக இணைந்து தாக்குதல் மேற்கொண்டன. அதற்கு பதிலடி தரும் வகையில் இஸ்ரேல் மற்றும் வளைகுடாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் மேற்கொண்டது. இதோடு ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது. உலக நாடுகளில் எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது.

          

பாகிஸ்தான் மத்தியஸ்தம்: “ஈரான் நாகரிகம் இன்றிரவு அழிக்கப்படும். அவர்களால் மீண்டெழ முடியாது. இதை நான் விரும்பவில்லை. ஆனால் இதை தவிர வேறு வழியில்லை. ஈரானில் முழுமையான ஆட்சி மாற்றம் ஏற்படும். மதவாத சக்திகள் அழிக்கப்படும். அந்த நாட்டில் புதிய புரட்சி மலரும். ஈரானின் 47 ஆண்டுகால அராஜகத்துக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கப்படும்,” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அந்த கெடு முடிய சுமார் 90 நிமிடங்கள் மட்டுமே இருந்தது. இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தயார் நிலையில் இருந்தது. ‘என்ன நடக்கும்’ என்ற பதைபதைப்பில் உலக மக்கள் இருந்தனர். ஈரான் அரசின் கோரிக்கையை ஏற்று தங்கள் நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு அருகே மனித சங்கிலி அமைத்து உயிர் தியாகத்துக்கு ஈரான் மக்கள் தயாராக இருந்தனர். அதை ஈரானின் அரசு ஊடகம் நேரலையில் ஒளிபரப்பியது.

அமெரிக்க அரசின் கெடுவுக்கு இணங்க மறுத்தது ஈரான் அரசு. மறுபக்கம் வழக்கமான தாக்குதலை அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடுத்தன. அமெரிக்கா கார்க் தீவையும், இஸ்ரேல் ஈரானில் உள்ள பாலங்கள் மீதும் தாக்குதல் நடத்தி கொண்டிருந்தன.

இந்த நிலையில் இடைக்கால போர் நிறுத்த முயற்சியில் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் தீவிரமாக செயல்பட்டார் அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப். அமெரிக்கா மற்றும் ஈரான் தலைவர்களுடன் தொலைபேசி வழியாக அவர் பேச்சுவார்த்தை மேற்கொண்டதாக தகவல். அதற்கு முன்பாக செவ்வாய்க்கிழமை அன்று இரண்டு வார கால இடைக்கால போர் நிறுத்த யோசனையை அவர் முன்மொழிந்தார். அதை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த அவர், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், துணை அதிபர் வான்ஸ் மற்றும் ஈரான் தலைவர்களை அதில் டேக் செய்திருந்தார். அதிபர் ட்ரம்ப் இரண்டு வார காலம் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும், அந்த காலகட்டத்தில் நல்லெண்ண நடவடிக்கையாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் திறக்க வேண்டும் என அவர் கூறியிருந்தார்.

பாகிஸ்தானின் இந்த முன்மொழிவு அதிபர் ட்ரம்ப்பின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக வெள்ளை மாளிகையின் செய்திப்பிரிவு செயலர் கரோலின் கூறியிருந்தார். பாகிஸ்தானின் இந்த முன்மொழிவானது, போரில் இருந்து அமெரிக்கா பின்வாங்கியது மற்றும் ஈரான் சரணடைந்தது என்ற கூற்றை இரு தரப்பும் தவிர்க்கும் வகையில் அமைந்தது. இதற்கிடையே போர் நிறுத்தம் சார்ந்த ஈரான் சில நிபந்தனைகளை முன்மொழிந்தது.

“பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவ தளபதி அசிம் முனீரின் கோரிக்கையை ஏற்று ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி வைக்கிறேன். இரண்டு வார காலத்துக்கு ஈரான் மீது தாக்குதல் மேற்கொள்ள மாட்டோம். ஹார்முஸ் ஜலசந்தியை முழுவதுமாக, உடனடியாக மற்றும் சரக்கு கப்பல்கள் பாதுகாப்பாக கடக்க வேண்டும்” என ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இரு தரப்பு போர் நிறுத்தத்தை ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி உறுதி செய்தார்.

போர் நிறுத்தம் சார்ந்து சுமார் 11 மணி நேரம் இடைவிடாது பாகிஸ்தான் பணியாற்றியதாக சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. உலக வல்லரசு நாடுகள் போர் நிறுத்தம் சார்ந்த முயற்சிகளை முன்னெடுக்காத சூழலில் பாகிஸ்தான் இதை மேற்கொண்டிருந்தது கவனிக்கத்தக்கது.

“ஈரானும், அமெரிக்காவும் இடைக்கால போர் நிறுத்தத்துக்கு சம்மதித்துள்ளன என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மேற்காசிய பிராந்தியத்தில் உடனடியாக இந்த போர் நிறுத்தம் அமலுக்கு வருகிறது. இதை அமெரிக்க நட்பு நாடுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. அமைதியை உறுதி செய்ய இரண்டு தரப்பு ஆர்வம் காட்டியது. வரும் நாட்களில் நல்ல செய்தி வரும்” என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

வரும் வெள்ளிக்கிழமை அன்று ஈரான் - அமெரிக்கா இடையில் இஸ்லாமாபாத் நகரில் பேச்சுவார்த்தை மேற்கொள்ள இரு நாடுகளுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். இதன் மூலம் அனைத்துக்கும் தீர்வு காணப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT