கராச்சியில் உள்ள அமெரிக்க துணைத்தூதரகம்

 
உலகம்

கமேனி மரணம்: கராச்சியில் அமெரிக்க துணை தூதரகத்தின் மீது தாக்குதல் - 8 பேர் உயிரிழப்பு

வேட்டையன்

கராச்சி: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் கமேனி உயிரிழந்தைக் கண்டித்து, பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள அமெரிக்க துணைத்தூதரகம் சூறையாடப்பட்டது. அப்போது போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 8 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர்.

அந்நாட்டின் துறைமுக நகரமான கராச்சியில் அமெரிக்க துணைத்தூதரகம் செயல்பட்டு வருகிறது. கமேனியின் மரணம் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று (மார்ச் 1) அந்நாட்டை சேர்ந்த நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், கராச்சியில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டனர். அப்போது போராட்டக்காரர்களில் சிலர் துணைத்தூதரகத்தின் ஜன்னல்களை அடித்து நொறுக்கினர்.

          

“நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். எந்த சக்தியாலும் நம்மைத் தடுக்க முடியாது. நாங்கள் கராச்சியில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை தீக்கிரை ஆக்குவோம். எங்கள் தலைவரின் கொலைக்கு நாங்கள் பழி தீர்ப்போம்” என்று போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் தெரிவித்தனர். இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வீடியோவாக வெளியாகி உள்ளன.

அப்போது போராட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 8 பேர் உயிரிழந்தனர், 20 பேர் காயமடைந்தனர். இதை பாகிஸ்தானை சேர்ந்த காவல் அதிகாரி முகமது ஜவாத் உறுதி செய்துள்ளார்.

கமேனி மரணத்தை அடுத்து பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களில் மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட அவர்கள் முடிவு செய்துள்ளதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் நிலை என்ன? - கமேனி மரணத்தை தொடர்ந்து தலைநகர் டெல்லியில் உள்ள ஈரான் தூதரகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில் அந்நாட்டின் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. காஷ்மீரில் பல இடங்களில் கமேனி மரணத்தை கண்டித்து மக்கள் வீதியில் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கமேனிக்கு அவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

சென்னையில் உள்ள அமெரிக்க துணைத்தூதரகம் முன்பு இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிமுன் அன்சாரி, கருணாஸ் மற்றும் தனியரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT