ஈரான் அதிபர் மசூத் பெஷ்கியான் |கோப்புப் படம்

 
உலகம்

போரை முடிவுக்கு கொண்டுவர ஈரான் முன்வைக்கும் 3 நிபந்தனைகள்

மோகன் கணபதி

தெஹ்ரான்: போரை முடிவுக்குக் கொண்டு வர மூன்று நிபந்தனைகளை விதித்துள்ள ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், நிபந்தனைகள் ஏற்கப்பட்டால் மட்டுமே போர் முடிவுக்கு வரும் என தெரிவித்துள்ளார்.

ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறிய நிலையில், போரை முடிவுக்குக் கொண்டு வர ஈரான் மூன்று நிபந்தனைகளை விதித்துள்ளது. இதனைத் தெரிவித்துள்ள ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், ‘‘போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமானால், மூன்று நிபந்தனைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

ஒன்று, ஈரானுக்கு உள்ள உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும், இரண்டாவது, ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், மூன்றாவது எதிர்காலத்தில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படாது என்ற உறுதிமொழி வழங்க வேண்டும்.

          

அமைதியை ஏற்படுத்துவதில் ஈரான் உறுதியாக உள்ளது. என்றபோதிலும், அமெரிக்காவும் இஸ்ரேலும் இந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே இந்த மோதல் முடிவுக்கு வரும். ஏனெனில், அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதல்கள் காரணமாகவே இந்த போர் தொடங்கியது.

ஈரானின் பாதுகாப்புக்கு வலுவான சர்வதேச உத்தரவாதங்கள் கிடைத்தால் மட்டுமே போர் முடியும்’’ என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அக்சியாஸ் ஊடகத்துக்கு டொனால்ட் ட்ரம்ப் அளித்தப் பேட்டியில், “ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரும். ஏனெனில், ஈரானில் அமெரிக்க ராணுவம் குறிவைத்து குண்டுவீசி அழிப்பதற்கு என்று எதுவும் இல்லை. எந்த நேரத்திலும் முடிவுக்குக் கொண்டுவர நான் விரும்புகிறேன். போர் முடிவுக்கு வரும்.

இந்தப் போர் இதுவரை சிறப்பாக நடந்துள்ளது. விளைவுகள் திட்டமிட்டதைவிட அதிகமாக உள்ளது. நாங்கள் 6 வார காலத்தில் எந்த அளவிலான அழிவை ஏற்படுத்த நினைத்தோமோ அதைவிட அதிகமாகவே நிகழ்த்திவிட்டோம்” என்று கூறி இருந்தார்.

இந்தப் போர் காரணமாக ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி உட்பட, ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்த போர், அதிக அளவிலான பொருட்சேதத்தை இரு தரப்புக்கும் ஏற்படுத்தியது. அதோடு, ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரான் கட்டுப்பாடுகளை விதித்தால், பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலை சர்வதேச அளவில் உயர்ந்தது.

மேலும், அவற்றுக்கு தட்டுப்பாடுகளும் அதிகரிக்கத் தொடங்கின. இந்தியாவில், வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதோடு, அவற்றுக்கான தட்டுப்பாடும் அதிகரித்ததால் பலரும் பாதிக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT