ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியான்
டெஹ்ரான்: அமெரிக்கா - இஸ்ரேலுடனான போரை நிறுத்த, ஈரான் அதிபர் 3 நிபந்தனைகளை விதித்துள்ளார்.
அணு ஆயுத தடை ஒப்பந்தத்துக்கு மறுத்ததால் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த மாதம் 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இதில் ஈரான் உச்ச தலைவராக இருந்த அயத்துல்லா காமேனி உட்பட 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 10 நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் போரை நிறுத்துவது தொடர்பாக ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியானுடன் ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தியது.
இதையடுத்து எக்ஸ் தளத்தில் ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியான் வெளியிட்ட பதிவில், “மத்திய கிழக்கில் அமைதி நிலவ ஈரான் உறுதியுடன் இருக்கிறது. அமெரிக்கா - இஸ்ரேலால் தொடங்கப்பட்ட போரை நிறுத்துவதற்கு ஒரே வழி ஈரானின் சட்டப்படியான உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும்.
போர் மூலம் ஏற்படுத்திய சேதத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும். எதிர்காலத்தில் ஈரான் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என சர்வதேச உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். இந்த 3 நிபந்தனைகளை ஏற்றால், ஈரான் போரை நிறுத்தும்” என கூறியுள்ளார்.
ஈரான் ராணுவ செய்தி தொடர்பாளர் அபோல்பசல் சேகர்ச்சி அளித்த பேட்டியில், ”ஈரான் துறைமுகங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், பெர்சியன் வளைகுடாவில் உள்ள அனைத்து துறைமுகங்கள் மற்றும் பொருளாதார மையங்கள் மீது ஈரான் இதுவரை இல்லாத அளவில் மிகப் பெரிய தாக்குதல் நடத்தும். அதனால் வளைகுடா பகுதியில் உள்ள அனைத்து நாடுகளும், அமெரிக்க படைகளை தங்கள் நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும்” என்றார்.
ஆட்சி மாற்றம் ?
ஈரான் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தியதால், ஆயிரக் கணக்கானோரை ஈரான் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். ஈரான் மீதான தாக்குதல் காரணமாக, அங்கு மக்கள் மீண்டும் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டத்தில் இறங்குவர் என அமெரிக்காவும், இஸ்ரேலும் எதிர்பார்த்தது.
ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை. ஈரான் அரசின் மிரட்டல்களுக்கு பயந்து ஈரான் மக்கள் போராட்டத்தில் ஈடுபடவில்லை. அதனால் ஈரான் போர் காரணமாக அங்கு ஆட்சி மாற்றம் உறுதியில்லை என்பதை இஸ்ரேல் அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இதற்கிடையே ஈரானின் போர்க் கருவிகள் யாருடைய உத்தரவுமின்றி ‘ஆட்டோ பைலட்’ இயக்கத்தில் ஏவுகணைகளை வீசி வருகின்றன என்று ஈரான் தரப்பில் கூறியிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.