ஈரானின் உச்ச தேசியப் பாதுகாப்புக் குழுவின் செயலாளர் அலி லாரிஜானி
டெல் அவிவ்: ஈரானின் உச்ச தேசியப் பாதுகாப்புக் குழுவின் செயலாளர் அலி லாரிஜானி, தங்களது ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் இன்று (மார்ச் 17) தெரிவித்தார்.
ஈரான் தேசிய பாதுகாப்புக் குழுவின் செயலாளர் அலி லாரிஜானி கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். நேற்றிரவு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு செயலாளர் லாரிஜானி உயிரிழந்தது குறித்த தகவல் தனக்கு கிடைத்துள்ளதாக காட்ஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்த தகவலை ஈரான் தரப்பு இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
மறைந்த உச்ச தலைவர் அயத்துல்லா காமேனியின் நம்பிக்கைக்குரிய நபரான லாரிஜானி, தற்போது உச்ச தேசியப் பாதுகாப்புக் குழுவின் செயலாளராக உள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரானை வழிநடத்துவதில் முக்கியத் தலைவராக அலி லாரிஜானி செயல்பட்டு வருகிறார். இதனால், அவர் தொடர்ந்து குறிவைக்கப்பட்டு வந்தார்.
மேலும், இந்தத் தாக்குதலில் ஈரான் புரட்சிகரப் படையின் முழுத் தன்னார்வப் பிரிவான 'பசிஜ்' (Basij) படையின் தலைவர் குலாம் ரெஸா சுலைமானியும் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஈரானில் சமீபத்தில் நடத்தப்பட்ட மற்றொரு இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல், பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் தலைவர் அக்ரம் அல்-அஜூரி மற்றும் அந்தத் தீவிரவாதக் குழுவின் பிற தலைவர்களும் குறிவைக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
'தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்' பத்திரிகை செய்தியின்படி, இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையான ஐடிஎஃப்-ன் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் இயால் ஜமீர் இந்த விவரங்களை உறுதிப்படுத்தினார்.
செவ்வாய்க்கிழமை காலை ஒரு செய்தியாளர் சந்திப்பின்போது லெப்டினன்ட் ஜெனரல் ஜமீர், "இரவு நேரத்தில் குறிப்பிடத்தக்க இந்த தாக்குதல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது ராணுவ நடவடிக்கையின் சாதனையை குறிக்கிறது" என்று கூறினார். இது லாரிஜானியைக் குறிவைத்த தாக்குதலைக் குறித்து பேசியதாகத் தெரிகிறது.
முன்னதாக, திங்கள்கிழமையன்று அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் எதிரான போரில் ஈரான் உறுதியுடன் இருப்பதாக அலி லாரிஜானி ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதில் அவர், “அண்டை நாடுகளில் அமெரிக்கத் தளங்கள் அமைந்திருக்கும் நிலையில், ஈரான் கைகளைக் கட்டிக்கொண்டு சும்மா இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது” என்றார்.
மேலும், இந்தப் பிராந்தியத்தின் மீது ஈரான் எந்தவிதமான ஆதிக்கத்தையும் கோரவில்லை என்று வலியுறுத்திய லாரிஜானி, இஸ்லாமிய நாடுகளின் ஒற்றுமைக்கும் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.