உலகம்

போர் நிறுத்த பேச்சுவார்த்தை: அமெரிக்க அழைப்பை நிராகரித்த ஈரான் கூறுவது என்ன?

மோகன் கணபதி

துபாய்: போர் நிறுத்தம் தொடர்பான அமெரிக்காவின் 15 அம்ச திட்டத்தை மத்தியஸ்தர்கள் மூலம் ஈரான் பெற்றதாகவும், எனினும் பேச்சுவார்த்தைக்கான அமெரிக்காவின் அழைப்பை ஈரான் நிராகரித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது தாக்குதலை தொடங்கின. இதையடுத்து, ஈரான் பதிலடி கொடுக்கத் தொடங்கியது. இரு தரப்புக்குமான போர் 25 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில், ஈரானுடனான பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக இருப்பதாகவும், எனவே 5 நாட்களுக்கு ஈரான் மீதான தாக்குதலை நிறுத்துவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த 23-ம் தேதி அறிவித்தார். ஆனால், அமெரிக்காவுடன் எத்தகைய பேச்சுவார்த்தையிலும் தாங்கள் ஈடபடவில்லை என ஈரான் திட்டவட்டமாகக் கூறியது.

          

இதனிடையே, இலக்கை எட்டும் வரை திட்டமிட்டபடி ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கு எதிராகவும், மேற்காசியாவில் உள்ள அமெரிக்க நிலைகளை குறிவைத்தும் ஈரான் தனது தாக்குதலை தொடர்ந்து வருகிறது.

இந்த பின்னணியில், பாகிஸ்தான் உதவியுடன் மத்தியஸ்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அசோசியேட் பிரஸ் செய்தி ஒன்று, போர் நிறுத்தம் தொடர்பான அமெரிக்காவின் 15 அம்ச திட்டத்தை பாகிஸ்தான், ஈரானிடம் கொண்டு சேர்த்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

இந்த ராஜதந்திர முயற்சிகளை ஈரான் ராணுவம் கிண்டல் செய்துள்ளது. ‘உங்கள் உள் மோதல்கள் உங்களுக்குள்ளேயே நீங்கள் பேரம் பேசும் நிலையை எட்டியுள்ளதா?’ என்று ஈரான் ராணுவம் மற்றும் துணை ராணுவப் புரட்சிகரக் காவலர் படை ஆகிய இரண்டுக்குமான மத்திய தலைமையகம் கேலி செய்துள்ளது.

இது தொடர்பாக அரசு தொலைக்காட்சியில் உரையாற்றிய மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் இப்ராஹிம் சோல்பகாரி, ‘‘முதல் நாளில் இருந்து எங்கள் முதல் மற்றும் கடைசி வார்த்தை ஒன்றாகவே இருந்து வருகிறது. அது அப்படியே தொடரும். எங்களைப் போன்றவர்கள் உங்களைப் போன்றவர்களுடன் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள். இப்போது மட்டுமல்ல; எப்போதும்’’ என தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்தத்துக்கான திட்டத்தை அமெரிக்கா சமர்ப்பித்துள்ளதை அறிந்து இஸ்ரேல் ஆச்சரியமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து வெளியான செய்தியில், ‘போர் நிறுத்தத்துக்கான அமெரிக்காவின் 15 அம்ச திட்டம் ஆச்சியம் அளிப்பதாக பெயர் வெளியிட விரும்பாத இஸ்ரேலிய அதிகாரி தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், இது குறித்து கருத்து தெரிவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு வெள்ளை மாளிகை பதிலளிக்கவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல் இன்று மீண்டும் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. ஈரானின் அரசு கட்டிடங்களைக் குறிவைத்து புதன்கிழமை அதிகாலை முதல் புதிய மற்றும் பரவலான தாக்குதல்களை தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. ஈரானும், இஸ்ரேல் மற்றும் பாரசீக வளைகுடா பகுதி மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. குவைத் சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்ட ஒரு பெரும் தாக்குதலும் இதில் அடங்கும்.

ஈரானுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் அதேநேரத்தில், மேற்கு ஆசியாவில் தனது படைபலத்தை அதிகரிப்பதிலும் அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கெனவே அப்பகுதிக்குச் சென்று கொண்டிருக்கும் கடற்படையினருக்கு ஆதரவாக, பாராட்ரூப்பர்களை (paratrooper) அனுப்ப தொடங்கியுள்ளது. மேலும், இரண்டு கடற்படை பிரிவுகளை அனுப்பும் பணியில் பென்டகன் ஈடுபட்டுள்ளது. இதன்மூலம், சுமார் 5 ஆயிரம் கடற்படை வீரர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மாலுமிகள் இப்பகுதிக்கு கூடுதலாக அனுப்பப்பட இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT