ஈரானில் போராடும் மக்களுக்கு ஆதரவாக ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடைபெற்ற போராட்டம்
தெஹ்ரான்: ஈரானில் ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், வன்முறைப் போராட்டத்தில் ஈடுபடுவர்களுக்கு எதிராக விரைவாக விசாரணை நடத்தப்பட்டு, விரைவாக மரண தண்டனை விதிக்கப்படும் என்று அந்நாட்டின் நீதித் துறை தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் தொடர் தடைகளால் ஈரான் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஈரான் நாணயத்தின் மதிப்பு கடுமையான சரிவைச் சந்தித்து வருகிறது. இதன் காரணமாகவும், அந்நாட்டு அரசின் தீவிர மதவாத அணுகுமுறை காரணமாகவும் மக்கள் கொதிப்படைந்துள்ளனர். இதனால், உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் ஆட்சிக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால், சட்டம் - ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
போராட்டங்களை ஒடுக்க பாதுகாப்புப் படைகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளதை அடுத்து, பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2,400-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் உயிரிழந்துள்ளனர். 18,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக இன்று (ஜன.14) காலை சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ‘‘போராட்டங்களுக்கு எதிரான ஒடுக்குமுறை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,571 ஆக உயர்ந்துள்ளது. இதில், 2,403 பேர் போராட்டக்காரர்கள். 147 பேர் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள். போராட்டங்களில் பங்கேற்காத 9 பொதுமக்களும் 12 குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளனர். 18,100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபர்களுக்கு எதிரான விசாரணை தீவிரப்படுத்தப்படும் என்று ஈரானின் நீதித் துறைத் தலைவர் குலாம்ஹொசைன் மொஹ்சேனி-எஜெய் தெரிவித்துள்ளார்.
ஈரானிய அரசு தொலைக்காட்சிக்கு அவர் அளித்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், ‘‘ஒருவர் மற்றொருவரை எரித்தாலோ, தலையை துண்டித்தாலோ, தீ வைத்துக் கொளுத்தினாலோ, நமது வேலையை நாம் விரைவாகச் செய்ய வேண்டும். நாம் ஒரு வேலையைச் செய்ய விரும்பினால், அதை இப்போதே செய்ய வேண்டும். நாம் ஏதாவது செய்ய விரும்பினால் அதை விரைவாகச் செய்ய வேண்டும். அது தாமதமானால், அதற்கு அதே விளைவு இருக்காது. நாம் ஏதாவது செய்ய விரும்பினால் அதை வேகமாகச் செய்ய வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.
போராட்டங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு மரண தண்டனை உட்பட கடுமையான தண்டனை விரைவாக விதிக்கப்படும் என்பதையே அவர் உணர்த்த முயல்வதாகக் கூறப்படுகிறது.
போராட்டங்களை ஈரான் அரசு ஒடுக்கினால், அமெரிக்கா ராணுவ ரீதியாக தலையிடும் என அந்நாட்டு டொனால்டு ட்ரம்ப் எச்சரித்திருந்த நிலையில், ஈரான் நீதித் துறைத் தலைவரின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.