டெஹ்ரான்: ஈரான் வான் பரப்பில் பறந்த அமெரிக்க விமானப் படையின் எப் -35 மற்றும் எப்- 15 இ ரக போர் விமானங்களை நேற்று சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கு ஆதாரமாக, போர் விமானங்களின் உடைந்த பாகங்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு உள்ளன. ஆனால் இந்த தகவல்கள் உறுதி செய்யப்படவில்லை. அமெரிக்க ராணுவமும் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை உறுதி செய்யவில்லை. அமெரிக்க போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டபோது ஒரு விமானி பாராாசூட் மூலம் உயிர் தப்பியதாகக் கூறப்படுகிறது.
அந்த விமானியை ஈரான் ராணுவம் பிடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இதுவும் உறுதி செய்யப்படவில்லை. அமெரிக்க விமானி பிடிபட்டது தொடர்பான புகைப்படமோ, வீடியோவோ வெளியிடப்படவில்லை. கடந்த மார்ச் 19-ம் தேதி அமெரிக்காவின் எப்-35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தினோம். தற்போது இரண்டாவது எப்-35 ரக போர் விமானத்தையும் சுட்டு வீழ்த்தியுள்ளோம் என்று ஈரான் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.