ஈரான் நடத்திய தாக்குதலில் சேதமடைந்த பகுதியை பார்வையிடும் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர்.

 
உலகம்

ஈரானின் தீவிரத் தாக்குதல் எதிரொலி: இஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கர்களுக்கு அறிவுறுத்தல்

வளைகுடா நாடுகளிலும் விடப்பட்ட ‘வார்னிங்’

மோகன் கணபதி

இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகளை குறிவைத்து தனது தாக்குதலை ஈரான் தீவிரப்படுத்தி உள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள அதிபர் ட்ரம்ப் நிர்வாகம், இஸ்ரேலை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கர்களை அறிவுறுத்தியுள்ளது.

இஸ்ரேல் - ஈரான் மோதலின் 4-வது நாளான இன்று சண்டை மேலும் தீவிரமடைந்துள்ளது. சவூதி அரேபிய தலைநகர் ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது ஈரான் ட்ரோன் தாக்குதலை நடத்தியது. இதில், தூதரகம் சேதமடைந்தது.

எனினும், தாக்குதல் நடந்தபோது தூதரகம் காலியாக இருந்ததால், யாருக்கும் காயமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதேபோல், குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்தும் ஈரான் தாக்குதல் நடத்தியது.

          

இதனிடையே, இந்த பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் அனைத்து தளங்களையும் நாங்கள் குறிவைப்போம் என்று ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு கொள்கைக் குழு உறுப்பினர் அலாவுதின் போரோஜெர்டி, “இந்த பிராந்தியத்தின் ராணுவ சக்தியாக திகழக்கூடியது ஈரான். அமெரிக்காவின் அனைத்து தளங்களையும் நாங்கள் குறிவைப்போம்; அது எங்கள் உரிமை.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “பாரசீகம் (ஈரான்) ஒருபோதும் தளபதிகள், வீரர்கள் மற்றும் ஆயுதங்களை இழக்காது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலை குறிவைத்து ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால், அந்நாட்டில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து இஸ்ரேலின் சேனல் 12 வெளியிட்டுள்ள செய்தியில், ஈரான் ஏவுகணை, இஸ்ரேலின் பெட்டா டிக்வா நகரத்தை தாக்கியது. இதில், பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. அதேநேரேத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது.

அமெரிக்கர்கள் வெளியேற அறிவுறுத்தல்:

இஸ்ரேலில் உள்ள அமெரிக்கர்கள் அந்நாட்டை விட்டு வெளியேற அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்காபி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘டெல் அவிவில் உள்ள பென் குரியன் விமான நிலையம் எப்போது திறக்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. விமானப் பயணம் தடைபட்டுள்ளதால், இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் அமெரிக்கர்கள் எகிப்தின் சினாய் தீபகற்பம் வழியாக வெளியேறலாம். பேருந்தின் மூலம் அவர்கள் சினாய் தீபகற்பம் செல்ல முடியும். இப்போதைக்கு அதுதான் சிறந்த வழி’’ என்று அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் அறிவிப்பு:

ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், ஈராக், ஜோர்டான், குவைத், கத்தார் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க அதிகாரிகளில் அவசரப் பணியில் இல்லாதவர்கள் அந்த நாடுகளை விட்டு வெளியேற அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதல் காரணமாக அந்த தூதரகம் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நிலவும் பதற்றங்கள் காரணமாக குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும். அனைத்து வழக்கமான மற்றும் அவசரகால தூதரக சந்திப்புகளும் ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் 787 பேர் உயிரிழப்பு:

ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்குதலை தொடங்கியதில் இருந்து இதுவரை 787 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரானின் ரெட் கிரசண்ட் சொசைட்டி தெரிவித்துள்ளது.

ஈரான் முழுவதும் 153 நகரங்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட இடங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அது தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT