அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்

 
உலகம்

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரி: ட்ரம்ப்பின் மறைமுக இலக்கு இந்தியாவா?

அனலி

வாஷிங்டன்: ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

“ஈரான் அரசுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாடும் அமெரிக்காவுடன் மேற்கொள்ளும் வணிகத்திற்கு 25% வரி செலுத்த வேண்டும். இந்த உத்தரவு இறுதியானது” - இது தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு.

உக்ரைன் - ரஷ்யா இடையே போரா அதற்கு ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிப்பு, ஈரானில் உள்நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டமா? அதற்கும் இந்தியாவுக்கு கூடுதல் வரி!

இப்படி உலகில் எங்கு எது நடந்தாலும் முந்திக் கொண்டு பொருளாதாரத் தடையை விதித்து, அதனால் தடை விதிக்கப்பட்ட நாட்டுக்கும் அதனுடன் வணிகத் தொடர்பில் இருக்கும் நாடுகளுக்கும் பொருளாதாரச் சிக்கலை ஏற்படுத்துவது அமெரிக்காவுக்கு புதிது இல்லை என்றாலும், ட்ரம்ப் ஆட்சியில் அதன் வீச்சு சற்றே தூக்கலாக, அதுவும் துல்லியமாக சில நாடுகளைக் குறிவைத்தும் இருப்பதாக நிபுணர்கள் கணிக்கின்றனர்.

அந்த வகையில் ஈரானுடன் வர்த்தகத் தொடர்பு கொண்டுள்ள நாடுகளுக்கு ட்ரம்ப் விதித்துள்ள இந்த 25% வரியால் அதிகம் பாதிக்கப்படக் கூடிய நாடுகள் சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளாக இருக்கும். ஈரானுடன் வர்த்தக தொடர்பில் இருக்கும் டாப் 5 நாடுகளில் இவை உள்ளன. துருக்கி, ஐக்கிய அரபு அமீரகமும் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.

என்ன நடக்கிறது ஈரானில்? இந்த புதிய வரிவிதிப்புக்குப் பின்னால் ஈரானில் நடைபெறும் போராட்டங்கள் உள்ளன. ஈரான் அணு ஆயுத தயாரிப்​பில் ஈடு​பட்​ட​தால், அந்​நாட்​டின் மீது சர்வ​தேச தடைகள் விதிக்​கப்​பட்​டன. இதன் காரண​மாக ஈரானின் பொருளாதா​ரம் வீழ்ச்​சி​யடைந்​தது. இதனால் ஈரான் மக்​கள் ஆட்சியாளர்​களுக்கு எதி​ராக கடந்த மாதம் 28-ம் (டிச.28,2025) தேதி போராட்டத்தில் குதித்​தனர். இவர்​கள் மீது ஈரான் பாது​காப்பு படையினர் தாக்குதல் நடத்​தி​ய​தில் இது​வரை 203 பேர் இறந்துள்ளனர். 2,600 பேர் காயம் அடைந்​துள்​ளனர். போன் இணைப்பு​கள் மற்​றும் இணையதள இணைப்​பு​கள் துண்டிக்கப்பட்டுள்​ளன.

இதற்கு கண்​டனம் தெரி​வித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ”ஈரான் சுதந்​திரத்தை எதிர்​நோக்​கி​யுள்​ளது. அங்கு இதுவரை இல்​லாத அளவில் போராட்​டம் நடை​பெறுகிறது. ஈரான் மக்​களுக்கு உதவ அமெரிக்கா தயா​ராக இருக்​கிறது” என சமூக ஊடகத்​தில் தெரி​வித்​திருந்​தார்.

இந்​நிலை​யில் ஈரான் மீது தாக்​குதல் நடத்த அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டுள்​ளார். ஆனால் அவர் இன்​னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என அமெரிக்க இதழ்​களில் செய்தி வெளி​யானது. ஆனால், படையெடுப்புக்கு முனோட்டமாக வரி விதிப்பைத் தொடங்கியுள்ளது அமெரிக்கா. அதுதான், ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீதான 25% வரி விதிப்பு.

இந்தியா - ஈரான் வர்த்தகத்தில் பாதிப்பா? அமெரிக்காவின் இந்த புதிய வரி ஈரான் - இந்தியா வர்த்தகத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பார்ப்போம்.

ஈரான் - இந்தியா இடையே கடந்த 2024 - 25 காலக்கட்டத்தில் 1.68 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.14 ஆயிரம் கோடி ) அளவில் வர்த்தகம் நடந்துள்ளது. இதில் இந்திய ஏற்றுமதி ரூ.10 ஆயிரம் கோடி அளவிலானது; இறக்குமதி ரூ.3,700 கோடி மதிப்பிலானது.

கடந்த 2019-க்குப் பின் ட்ரம்ப் ஈரான் மீது விதித்த பல்வேறு தடைகளின் காரணமாக இந்தியா அங்கிருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்திக் கொண்டது என்பது சுட்டிக்காட்டத்தக்கது. இதனால், 2019-ல் இந்தியா - ஈரான் வர்த்தகம் ரூ.1.5 லட்சம் கோடியாக இருந்தது. அமெரிக்க தடைக்குப் பின்னர் அது 87% சரிந்து 2024-ல் ரூ.19 ஆயிரம் கோடியாக வீழ்ந்துள்ளது.

இப்படியான சூழலில் அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு ஈரான் - இந்தியா வர்த்தகத்தில் நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.

ஈரானுக்கான இந்திய ஏற்றுமதியில் பிரதானமானவை பாஸ்மதி அரிசி, தேநீர், சர்க்கரை, மருந்துப் பொருட்கள், பழங்கள், தானியங்கள், இறைச்சிப் பொருட்கள் அடங்கும். இந்திய பாஸ்மதி அரிசியின் மிகப்பெரிய சந்தை ஈரான். இப்போதைய புதிய வரிகள் பாஸ்மதி அரிசி ஏற்றுமதியை பாதிக்கும். அதேபோல் மெத்தனால், பெட்ரோலியம் பிட்டுமன், திரவ ப்ரோபேன் உள்ளிட்ட ரசாயனப் பொருட்கள், ஆப்பிள், பேரீச்சம் போன்ற பழங்கள் ஏற்றுமதியை பாதிக்கும்.

நெருக்கும் அமெரிக்கா: ரஷ்​யா​விட​மிருந்து கச்சா எண்​ணெய் வாங்கும் நாடு​கள் மீது 500% வரி விதிக்க வகை செய்​யும் மசோ​தாவுக்கு அமெரிக்க அதிபர் டொ​னால்டு ட்ரம்ப் கடந்த வாரம் ஒப்புதல் வழங்​கி​னார்.

இப்போது இந்த வாரம், ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரி விதித்துள்ளார்.

ஏற்கெனவே, ரஷ்​யா​விடம் இருந்து இந்தியா கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தால் இந்​திய பொருட்​களுக்கு அமெரிக்க அரசு 50 சதவீத வரியை விதித்துள்ள நிலையில், இந்த வரி விதிப்பு தொடர்​பாக இருநாடுகளின் மூத்த அதி​காரி​கள் பல்​வேறு சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்​தினர்.

இதுகுறித்து அமெரிக்க வர்த்தக அமைச்​சர் ஹோவர்ட் லுட்​னிக் “இந்​தி​யா, அமெரிக்கா இடையி​லான வர்த்தக ஒப்​பந்​தம் இறுதி செய்​யப்​பட்டு விட்​டது. வர்த்தக ஒப்​பந்​தம் தொடர்​பாக அதிபர் ட்ரம்​பை, பிரதமர் மோடி தொலைபேசி​யில் தொடர்பு கொண்டு பேசு​மாறு அறி​வுறுத்​தினேன். ஆனால் எனது கோரிக்​கையை இந்​திய குழு​வினர் ஏற்​க​வில்​லை. அதிபர் ட்ரம்​பிடம், இந்​திய பிரதமர் நரேந்​திர மோடி போனில் பேச மறுத்​த​தால் இரு நாடு​கள் இடையி​லான வர்த்தக ஒப்​பந்​தம் முடங்​கி​யிருக்கிறது.” என்றார்.

இவற்றையெல்லாம் தொகுத்துப் பார்க்கையில், ட்ரம்ப் வரி விதிப்புகளின் இலக்கு போர் நிறுத்தம், அமைதி ஏற்படுத்துதல் என்பதையும் தாண்டி தனது ஈகோவுக்குக் கட்டுப்படாத நாடுகள், குறிப்பாக இந்தியாவுக்குமானது என்பது உறுதியாவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

SCROLL FOR NEXT