டெஹ்ரான்: லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவது, அமைதி ஒப்பந்த விதிமீறல் என்பதால் ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது.
ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நீடித்து வந்த அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தை கடந்த வெள்ளிக்கிழமை முடிவுக்கு வந்தது. இருதரப்பு இடையே ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
அமைதி ஒப்பந்தத்தில் 14 அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. இதையடுத்து ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டு கப்பல் போக்குவரத்து தொடங்கியது. அடுத்த 60 நாட்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்க மாட்டோம். அதன்பிறகு கட்டணம் வசூலிப்போம் என்று ஈரான் கூறி வருகிறது.
மேலும், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் அமெரிக்க கடற்படையும் தனது முற்றுகையை படிப்படியாக விலக்கி கொள்ள முன்வந்தது. இதையடுத்து கச்சா எண்ணெய் கப்பல்கள் ஈரான் துறைமுகம் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
இதனால் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் இயல்பு நிலை திரும்பி கப்பல் போக்குவரத்து தொடங்கியது. இந்நிலையில் லெபனான் மீது இஸ்ரேல் படை நேற்று திடீர் தாக்குதல் நடத்தியது.
அமைதி ஒப்பந்தத்தில் லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் போர் நிறுத்தம் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை மீறி லெபனான் மீது இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தியது, ஒப்பந்த விதிமுறை மீறல் எனக் கூறிய ஈரான், இதற்கு பதிலடியாக ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்தது.
ஈரான் அரசு விடுத்துள்ள செய்தியில், ‘‘அமைதி ஒப்பந்த விதிமுறை மீறலுக்கு முதல் நடவடிக்கையாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளது. விதிமுறை மீறல் தொடர்ந்தால் மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அமெரிக்கா மற்றும் ஈரான் குழுவினர் சுவிட்சர்லாந்தில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.