உலகம்

அமெரிக்காவின் சக்தி வாய்ந்த எஃப்-35 போர் விமானத்தை தாக்கியதாக ஈரான் அறிவிப்பு

வெற்றி மயிலோன்

தெஹ்ரான்: அமெரிக்காவின் சக்தி வாய்ந்த எஃப்-35 ரக போர் விமானத்தைத் தாக்கியதாக ஈரான் அறிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவின் மிகவும் ஆற்றல் வாய்ந்த இத்தகைய போர் விமானத்தை தாக்கிய முதல் நாடு தாங்கள்தான் என்றும் ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.

மத்திய ஈரானின் வான்வெளியில் அமெரிக்க விமானப் படையின் எஃப்-35 ஸ்டெல்த் ரக போர் விமானத்தைத் தாக்கியதாக ஈரான் ராணுவம் (IRGC) தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பானதாகக் கூறப்படும் காணொலியும் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

ஈரான் ராணுவம் வெளியிட்ட அறிக்கைல், ‘உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:50 மணிக்கு ஈரான் ராணுவத்தின் மேம்பட்ட, நவீன வான் பாதுகாப்பு அமைப்புகளால் இந்த விமானம் தாக்கப்பட்டுள்ளது. அந்தப் போர் விமானத்தின் நிலைமை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

          

அதே நேரத்தில், எஃப்-35 அவசரமாகத் தரையிறங்கியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்குப் பிறகு, எஃப்-35 விமானம் அவசரமாகத் தரையிறங்கியதை அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள் காட்டி சிஎன்என் செய்தி வெளியிட்டது. மேலும், விமானி பாதுகாப்பாக உள்ளார் என்றும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் (CENTCOM) செய்தித் தொடர்பாளர் கேப்டன் டிம் ஹாக்கின்ஸ், “விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது, விமானி உடல்நிலை சீரான நிலையில் உள்ளது" என்று கூறினார்.

ஈரானின் பாதுகாப்பு அமைப்புகளால் 125-க்கும் மேற்பட்ட அமெரிக்க - இஸ்ரேலிய ட்ரோன்கள் வெற்றிகரமாகச் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்த தாக்குதல் நடந்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

எஃப்-35 விமானம் தங்களின் முக்கியமான ஆற்றல் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்தப் போரில் அமெரிக்காவும், இஸ்ரேலும் F-35 ரக போர் விமானங்களை பயன்படுத்தி வருகின்றன. ஈரான் குறிப்பிட்டபடி, எஃப்-35 ரக போர் விமானம் மீதான தாக்குதல் உறுதியானால், ஈரான் முதன்முறையாக சக்தி வாய்ந்த அமெரிக்க போர் விமானத்தைத் தாக்கி அழித்த நிகழ்வாக இது அமையும்.

SCROLL FOR NEXT