டெஹ்ரான்: அமெரிக்காவுடன் செய்து கொள்ளும் அமைதி வரைவு ஒப்பந்தத்தில், அணு ஆயுதங்களை தயாரிக்கவோ, வாங்கவோ மாட்டோம் என ஈரான் ஒப்புக் கொண்டுள்ளதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமைதி ஒப்பந்தம் ஓரிரு நாளில் கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்கா - ஈரான் இடையே கடந்த பிப்ரவரி 28-ம்தேதி போர் தொடங்கியது. அதன்பின் இருதரப்பு இடையே கடந்த ஏப்ரல் 8-ம் தேதி சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இருதரப்பு இடையே அமைதி மற்றும் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கான முயற்சியில் பாகிஸ்தான் உட்பட பல நாடுகள் களம் இறங்கின.
தற்போது இருதரப்பு இடையே அமைதி வரைவு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளதாக அமெரிக்கா மற்றும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஈரான் மூத்த அதிகாரி ஒருவர் கூறியிருப்பதாவது: அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி வரைவு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இறுதி ஒப்பந்தம் குறித்து இரு தரப்பும் 60 நாட்களுக்குள் விவாதித்து முடிவெடுக்கும். அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவோ, வாங்கவோ மாட்டோம் என்று ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது.
இறுதி ஒப்பந்தம் எட்டப்படும் வரை ஈரான் தனது தற்போதைய அணுசக்தி திட்டத்தை அப்படியே பராமரிக்கும். இதில் யுரேனியத்தை செறிவூட்டாமல் இருப்பதும், அணுசக்தி நிலையங்களை விரிவுபடுத்துவதை தவிர்ப்பதும் அடங்கும். ஈரானில் இருக்கும் செறிவூட்டப்பட்ட யுரேனிய இருப்பை நீர்த்துப்போகச் செய்வதை அமெரிக்கா ஏற்கும். இதற்கான வழிமுறைகள் குறித்து இரு தரப்பும் 60 நாட்களுக்குள் விவாதிக்கும்.
ஈரான் மீதான தடைகள் நீக்கம்: மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது ஆகியவை இந்த வரைவு ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளன. அனைத்து வணிகக் கப்பல்களுக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் உடனடியாக திறக்கும். ஈரானிய துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகையை அமெரிக்கா வாபஸ் பெறும்.
இரு தரப்பும் இறுதி ஒப்பந்தத்தை எட்டும் வரை அமெரிக்கா ஈரான் மீது புதிய தடைகளை விதிக்காது. வாஷிங்டன் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு எண்ணெய் மீதான தடைகளை தளர்த்தும். இதன்மூலம் ஈரான் எண்ணெய்யை விற்கவும், அதன் மூலம் கிடைக்கும் வருவாயை பயன்படுத்தவும் முடியும்.
25 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஈரானிய சொத்துகளை விடுவிக்க அமெரிக்கா வழிவகை செய்யும். இந்த ஒப்பந்தம் இன்றோ அல்லது ஒரு சில நாட்களிலோ கையெழுத்தாகலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த அமைதி ஒப்பந்தம் 14-ம் தேதி (நேற்று) கையெழுத்தாகும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்திருந்தார். ஆனால், இந்த கெடுவை நிராகரித்துள்ள ஈரானின் வெளியுறவு அமைச்சகம், வரும் நாட்களில் இந்த வரைவு ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்று தெரிவித்துள்ளது.