உலகம்

பற்றி எரியும் குவைத் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்: தாக்குதலுக்கு பின் ஈரான் கடும் எச்சரிக்கை!

வெற்றி மயிலோன்

குவைத்: குவைத்தின் மினா அல்-அஹ்மதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் இன்று (மார்ச் 20) நடத்திய ட்ரோன் தாக்குதல்களால் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக குவைத் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தாக்குதலைத் தொடர்ந்து, “எங்கள் உள்கட்டமைப்புகள் மீண்டும் தாக்கப்பட்டால், எங்களிடம் எந்தவிதமான கட்டுப்பாடும் இருக்காது.” என்று ஈரான் எச்சரித்துள்ளது

இன்று அதிகாலை மினா அல் அஹ்மதி சுத்திகரிப்பு நிலையம் ட்ரோன் தாக்குதல்களுக்கு உள்ளானதாகவும், அதன் விளைவாக சுத்திகரிப்பு நிலையத்தின் பல அலகுகளில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் குவைத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (KPC) தெரிவித்தது.

          

குவைத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தனது அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில், “இன்று அதிகாலை மினா அல் அஹ்மதி சுத்திகரிப்பு நிலையம் ட்ரோன் தாக்குதல்களுக்கு உள்ளானதால், பல பிரிவுகளில் தீ விபத்து ஏற்பட்டதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்நிறுவனத்தின் சில பகுதிகள் மூடப்பட்டன. இந்த தாக்குதலில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால், நிலைமையைக் கட்டுப்படுத்த அவசரகாலக் குழுக்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், புதன்கிழமை இரவு இஸ்ரேல், ஈரானின் தெற்கு பார்ஸ் எரிவாயு நிலையம் மீது தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக, கத்தாரின் ராஸ் லஃபான் தொழில்துறை நகரம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதில், பெரும் சேதம் ஏற்பட்டது. பின்னர் வியாழக்கிழமை, வடக்கு இஸ்ரேலில் உள்ள மிகப்பெரிய ஹைஃபா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியது.

இதற்கிடையில், வியாழக்கிழமை, ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி, “எங்கள் உள்கட்டமைப்பு மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு நாங்கள் அளித்த பதிலடி, எங்கள் சக்தியின் ஒரு சிறு பகுதி மட்டுமே. பதற்றத்தைத் தணிக்குமாறு கோரப்பட்ட கோரிக்கைக்கு மதிப்பளிப்பதே கட்டுப்பாட்டிற்கான ஒரே காரணம். எங்கள் உள்கட்டமைப்புகள் மீண்டும் தாக்கப்பட்டால், எங்களிடம் எந்தவிதமான கட்டுப்பாடும் இருக்காது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமானால், எங்கள் பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் சரிசெய்யப்பட வேண்டும்.” என்று கூறினார்.

SCROLL FOR NEXT