வாஷிங்டன்: கர்நாடகாவில் பிறந்த தொழில்நுட்பத் தொழில்முனைவோர் சைமன் ஷெட்டி, அமெரிக்காவில் பல ஆண்டுகளாக குடியேற்றச் சிக்கல்கள், தொழில் ரீதியான பின்னடைவை சந்தித்தார். அத்துடன் தன்னை நாடு கடத்த முயன்றதாகக் கூறப்படும் பொய்யான புகாரை எதிர்கொண்ட நிலையில், அதிலிருந்து விடுதலை பெற்று தற்போது அமெரிக்க குடியுரிமையைப் பெற்றுள்ளார்.
இந்த முக்கியமான நிகழ்வை, ஷெட்டி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில், கர்நாடகாவின் ஒரு சிறிய கிராமத்திலிருந்து அமெரிக்கக் குடிமகனாக மாறிய தனது பயணத்தைப் பற்றி நினைவு கூர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நிதி நெருக்கடியில் இருந்த நான் சர்வதேச மாணவராக அமெரிக்காவுக்கு வந்தபோது, எனக்கு நண்பர்களோ, ஆதரவளிக்க ஒருவரோ, மாற்றுத் திட்டமோ எதுவும் இல்லை. அமெரிக்கா எனக்கு சிவப்புக் கம்பள வரவேற்பை அளிக்கவில்லை. ஒவ்வொரு கட்டத்திலும் என்னை சோதனைக்கு உட்படுத்தியது.
எனது பயணம் கடன், வேலைவாய்ப்பு மறுப்பு, விசா தொடர்பான நிச்சயமற்ற நிலை மற்றும் நீண்டகால குடியேற்றப் பின்னடைவுகள் நிறைந்ததாக இருந்தது. எச்-1பி விசா குலுக்கலிலும் நான் தோல்வியடைந்தேன். பின்னர், தொழில்நுட்பத் துறையில் நிலைநிறுத்திக் கொண்டேன். ஒரு கட்டத்தில், சிலிக்கான் பள்ளத்தாக்கில் கிடைத்த நல்ல ஊதியமுள்ள வேலையையும் விட்டுவிட்டு, தொழில்முனைவோர் ஆகும் முயற்சியில் ஈடுபட்டேன்.
என்னை மோசடி செய்பவர் என சித்தரிக்க சிலர் முயன்றனர். அவர்கள் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பிடம் எனக்கு எதிராக புகார்கள் அளித்தனர். எனினும், அந்தக் குற்றச்சாட்டுகள் விசாரணையில் நிலைக்கவில்லை.
அமெரிக்க குடியேற்ற அமைப்பு இறுதியில் நியாயமான முடிவை வழங்கியது. எஃப்-1 மாணவர் விசா, எச்-1பி பணி விசா உள்ளிட்ட பல்வேறு விசாக்களில் இருப்பவர்கள் மற்றும் நீண்டகால குடியேற்றத் தாமதங்களை எதிர்கொள்பவர்கள் பொறுமையாக இருக்க வேண்டும். சட்டத்தைப் பின்பற்ற வேண்டும்.
மேலும், குடியேறிகள் சமூகத்துக்கு தொடர்ந்து ஆதரவளிப்பேன். எனது முயற்சிகள் மூலம் உதவி பெற்ற 300-க்கும் மேற்பட்ட குடியேறிகள், வரும் ஆண்டுகளில் என்னைப் போன்றே முக்கியமான சாதனைகளை அடைவார்கள் என எதிர்பார்க்கிறேன். என்னை நாடு கடத்த வேண்டும் என்று சிலர் விரும்பினர். ஆனால், அதற்குப் பதிலாக நான் அமெரிக்கக் குடிமகனாகிவிட்டேன். இனி அமெரிக்காவில் வாய்ப்புகளைத் தேடும் பிறருக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.