இந்திய விமானியை நலம் விசாரிக்கும் துபாய் இளவரசர் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம்.

 
உலகம்

விமானி ஸ்மித் மச்சார் நன்கு குணமடைந்து வருவதாக இந்திய தூதரகம் தகவல்

மோகன் கணபதி

அபுதாபி (ஐக்கிய அரபு அமீரகம்): நடுவானில் துணை விமானி தாக்கியதால் படுகாயம் அடைந்த இந்திய வம்சாவளி விமானி ஸ்மித் மச்சார் நன்கு குணமடைந்து வருவதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி புதன்கிழமை (செப்.30) காலை 180 பயணிகளுடன் ‘ஃபிளை துபாய்’ விமானம் புறப்பட்டது. இதில் 174 பயணிகளும், பைலட்டுகள் 2 பேர் உட்பட 6 ஊழியர்களும் பயணம் செய்தனர். இந்திய வம்சாவளி பைலட் ஸ்மித் மச்சார் (39) விமானத்தை இயக்கினார். ஓமன் நாட்டை சேர்ந்த துணை பைலட் உடன் இருந்தார்.

திடீரென பைலட் அறையில் இருந்த கோடரியால் ஸ்மித் மச்சாரைத் துணை பைலட் தாக்கினார். இதில் நிலைகுலைந்த மச்சார், துணை பைலட்டை தீரத்துடன் எதிர்த்துப் போராடினார்.

சரியான நேரத்தில் பைலட் அறையை திறந்து, சக பயணிகளின் துணையுடன் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கவும், பயணிகளின் உயிர் காக்கவும் உதவினார்.

இந்நிலையில், அவருக்கு பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நேதன்யாகு உட்பட உலக தலைவர்கள் தங்களது பாராட்டினை தெரிவித்தனர்.

துணை பைலட்டால் தாக்கப்பட்ட பைலட் ஸ்மித் மச்சார், சவூதி அரேபியாவின் தபூக் நகரில் முதலுதவி சிகிச்சைகளைப் பெற்று பின்னர் உயர் சிகிச்சைக்காக ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபிக்கு மாற்றப்பட்டார்.

அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஸ்மித் மச்சார் நன்கு குணமடைந்து வருவதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தூதரகம் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் பதிவில், ‘துணிச்சலான இந்திய விமானி ஸ்மித் மச்சார் சிறந்த மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார். அவர் நன்கு குணமடைந்து வருகிறார். அவர் விரைவில் குணமடைய உதவிகளை வழங்க, அவரது குடும்பத்தினர் மற்றும் அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம்.

அவருக்குச் சிறந்த கவனிப்பை வழங்கிய ஐக்கிய அரபு அமீரக அரசுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது நல்வாழ்வுக்காகப் பிரார்த்தனை செய்யும் நலம் விரும்பிகளுடன் நாங்களும் இணைகிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஸ்மித் மச்சாரை, துபாய் இளவரசர் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

யார் அந்த ஓமன் பைலட்?

இதனிடையே, இந்திய வம்சாவளி பைலட் ஸ்மித் மச்சாரைத் தாக்கிய துணை பைலட் அடையாளம் காணப்பட்டுள்ளார். ஓமன் நாட்டைச் சேர்ந்த அவரது பெயர் ஹமாம் அல் ஹம்மாமி என்பது தெரிய வந்துள்ளது. 2024-ல் ஓமன் ஏர் நிறுவனத்தில் பயிற்சி பெற்றபோது அவரிடம் தீவிரவாத பொருட்கள் இருந்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து அவர் ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர் வெளியிட்ட சில காணொளிகள், அல்-காய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய நபர்களின் படங்களுடன் முடிவடைந்ததாகவும் கூறப்படுகிறது. அவர் குறித்த விவரங்களை புலனாய்வு அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

தனது சமூக ஊடக பக்கத்தில் இருந்து சுமார் 3 ஆயிரம் பதிவுகளை அவர் நீக்கியதாகவும், அவை தீவிர மதக் கருத்துகளைக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT