கொழும்பு: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையில், நிவாரண பணிகளை மேற்கொள்ள பெய்லி பாலம், நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை விமானப்படை சிறப்பு விமானம் மூலம் இந்தியா அனுப்பி வைத்தது.
டிட்வா புயல் காரணமாக இலங்கையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 479 உயிரிழந்தனர், 350 பேரை காணவில்லை. வீடுகளை இழந்த 1,88,000 பேர் 1,347 நிவாரன முகாம்களில் தங்கியுள்ளனர். இலங்கையின் நிவாரண பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், ஆபரேஷன் சாகர் பந்து திட்டத்தின் கீழ் கடற்படை கப்பல்கள் மற்றும் விமானப்படை சிறப்பு விமானங்கள் மூலம் அளித்து வருகிறது.
இந்நிலையில் வெள்ளம் காரணமாக இலங்கையின் பல பகுதிகளில் பாலங்கள் இடிந்து துண்டாகியுள்ளன. இதனால் இங்கு நிவாரண பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. துண்டிக்கப்பட்ட பகுதிகளில் இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்படும் பெய்லி பாலங்களை அனுப்ப வேண்டும் எனவும், மக்களுக்கு சுத்தமான
குடிநீர் கிடைக்காததால் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்க வேண்டும் என இலங்கை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து விமானப்படையின் சி-17 குளோப் மாஸ்டர் சரக்கு விமானத்தில், பிற இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் பெய்லி பாலம், இதை அமைப்பதற்கான 22 பேர் அடங்கிய குழு, 500 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள், மருத்துவ குழு ஆகியவை இலங்கைக்கு நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப்பட்டதாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அதிபர் அனுர குமர திசநாயகே சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், "இலங்கைக்கு இந்தியா அளித்து வரும் வலுவான ஆதரவுக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி" என தெரிவித்துள்ளார்.