உலகம்

இந்திய எல்லை விவகாரம்: நேபாள பிரதமர் பதவி விலக கோரி மக்கள் போராட்டம்

வேட்டையன்

காத்மாண்டு: இந்திய எல்லை விவகாரத்தில் நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவின் கருத்துக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர் பதவி விலக வேண்டும் என இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கோரி வருகின்றனர்.

இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினை ஒருதலைப்பட்சமான விவகாரம் அல்ல என்று அந்நாட்டு பிரதமர் பாலேந்திர ஷா, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நேபாள நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். அவரது கருத்து அந்நாட்டு மக்களை கொதிப்படைய செய்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் நேபாள பிரதமராக பாலேந்திர ஷா பொறுப்பேற்றார். பொது தேர்தலில் இளைஞர்களின் ஆதரவு பெற்ற கட்சியான ஆர்எஸ்பி ஆட்சி அமைத்தது. அந்த கட்சியின் தலைவர்தான் பாலேந்திர ஷா. இளம் தலைமுறையினரின் போராட்டத்தை அடுத்து ஆட்சி மாற்றம் மூலம் அவர் பிரதமர் ஆனார். தற்போது அவரது அரசுக்கு எதிராக நேபாளத்தில் போராட்டம் வெடித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் எதிர்க்கட்சிகளும் இணைந்து போராடி வருகின்றனர். நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பாலேந்திரா ஷா பேச்சு உள்ளது என மக்கள் கூறி வருகின்றனர்.

லிபுலேக், லிம்பியாதுரா மற்றும் காலாபானி ஆகிய பகுதிகள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அறியப்படுகிறது. இதை சொந்தம் கொண்டாடி வருகிறது நேபாளம். இதற்கு பல்வேறு தருணங்களில் இந்தியா கடும் எதிர்வினையாற்றி உள்ளது.

இத்தகைய சூழலில் இருநாட்டுக்கும் இடையிலான எல்லை பிரச்சினையில் பிரிட்டன் பங்கேற்கலாம் என பாலேந்திர ஷா பரிந்துரைத்தார். இதற்கு பதிலடியாக இந்தியா-நேபாள எல்லை விவகாரத்தில் மூன்றாம் தரப்புக்கு இடம் இல்லை இந்தியா கூறியுள்ளது.

SCROLL FOR NEXT