புதுடெல்லி: இந்தியா, பாகிஸ்தானில் செயல்படும் அணு மின் நிலையங்களின் பட்டியலை இரு நாடுகளும் நேற்று பரிமாறிக் கொண்டன.
அணு மின் நிலையங்கள் தொடர்பாக கடந்த 1988-ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஒருவரின் அணு மின் நிலையங்களை மற்றவர் தாக்கக்கூடாது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ம் தேதி இரு நாடுகளும் அணு மின் நிலையங்கள் தொடர்பான பட்டியலை பரிமாறிக் கொள்ள வேண்டும்.
இந்த ஒப்பந்தத்தின்படி கடந்த 1992-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல்தடவையாக பட்டியல் பரிமாற்றம் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று இந்தியா, பாகிஸ்தானில் செயல்படும் அணு மின் நிலையங்களின் பட்டியலை இரு நாடுகளும் பரிமாறிக் கொண்டன.
கடந்த மே மாதம் இந்தியா, பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் போர் நடைபெற்றது. எனினும் ஒப்பந்தத்தை மதித்து இரு நாடுகளும் அணு மின் நிலையங்களின் பட்டியலை பரிமாற்றம் செய்திருப்பது முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
மேலும் இரு நாடுகளில் சிறைகளில் உள்ள கைதிகள் குறித்த விவரங்கள் ஆண்டுதோறும் ஜனவரி, ஜூலை மாதங்களில் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதன்படி பாகிஸ்தான் தரப்பில் நேற்று பட்டியல் அளிக்கப்பட்டது. பாகிஸ்தான் சிறைகளில் 257 இந்தியர்கள் உள்ளனர். இதில் 199 பேர் மீனவர்கள் ஆவர்.
இந்திய சிறைகளில் உள்ள பாகிஸ்தானியர்கள் குறித்த விவரங்கள் அந்த நாட்டிடம் அளிக்கப்பட்டு உள்ளன. இரு நாடுகளின் தூதரகங்கள் வாயிலாக இந்த தகவல்கள் பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
ஸ்டாக்ஹோம் அமைதி ஆராய்ச்சி கழகத்தின் அறிக்கையின்படி இந்தியாவிடம் 180 அணுகுண்டுகளும், பாகிஸ்தானிடம் 170 அணு குண்டுகளும் உள்ளன. பாகிஸ்தானின் கிரானா மலைப் பகுதியில் உள்ள ராணுவ தளத்தில் அணு குண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது கிரானா மலைப் பகுதியை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டது. அங்கு இந்திய ட்ரோன் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்த விவகாரம் குறித்து இந்திய விமானப்படை மூத்த தளபதி ஏ.கே.பார்தியிடம் நிருபர்கள் விளக்கம் கோரினர்.
அவர் கூறும்போது, “நாங்கள் கிரானா மலைப் பகுதியில் தாக்குதல் நடத்தவில்லை. அங்கு அணு குண்டுகள் இருப்பதாக இப்போதுதான் தெரியவந்திருக்கிறது. பாகிஸ்தான் அளிக்கும் அணு மின் நிலையங்களின் பட்டியலில் கிரானா இடம் பெறவில்லை. தற்போது நிருபர்கள் அளித்த பயனுள்ள தகவலுக்கு நன்றி” என்று தெரிவித்தார்.