உயிரிழந்த மூன்று இந்திய மாலுமிகள் பணிபுரிந்த கப்பல் எம்டி செட்டெபெல்லோ
தெஹ்ரான்: ஓமன் கடலோர பகுதியில் எண்ணெய் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்ததற்கு ஈரானே காரணம் என அமெரிக்கா கூறி இருந்த நிலையில், ஈரான் அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
அண்மையில் ஓமன் கடற்பகுதியில் இந்திய மாலுமிகள் அதிகம் நிறைந்த மூன்று எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியானது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இதில் ஒரு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர். ஆதித்ய சர்மா, சிவானந்த் சவுரேஸியா, தலைமை பொறியாளர் பட்னாலா சுரேஷ் ஆகியோர் உயிரிழந்த நிலையில், இது குறித்து ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், “ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் இருந்து சென்ற இந்திய கப்பல்கள் மீது அவர்கள் (ஈரான்) மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலை ஏற்றுக் கொள்ளவே முடியாது” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஈரான் தலைமை செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பகாயி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்திய வணிகக் கப்பல்கள் மீது அமெரிக்கா நடத்திய கொடூரமான தாக்குதல்களில் மூன்று இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது அமெரிக்காவின் ஆயுதமேந்திய கடல்சார் கொள்ளை கொள்கைக்கு தெளிவான சான்று. கொல்லப்பட்ட இந்திய மாலுமிகளின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எங்கள் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு, இந்திய மக்களுக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்து, கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தையும் ஆபத்துக்குள்ளாக்கும் அமெரிக்காவின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு சர்வதேச சமூகம் அவர்களை பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
எஸ்மாயில் பகாயி வெளியிட்டுள்ள பதிவை சுட்டிக்காட்டி இந்தியாவுக்கான ஈரான் தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில், ஹார்முஸ் நீரிணையில் உள்ள இந்திய கப்பல் விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்க அதிபர் முன்வைத்த குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது. ஒரு வாரத்துக்குள் அமெரிக்கா மூன்று இந்திய கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி, மூன்று அப்பாவி இந்திய மாலுமிகளைக் கொன்ற கொடூரமான உண்மையில் இருந்து பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியே இது. இது மிகவும் வருந்ததக்கது என தெரிவித்துள்ளது.
நடந்தது என்ன?: பசிபிக் கடல் பகுதியில் உள்ள தீவு நாடான பாலாவ் கொடி பொருத்தப்பட்ட ‘செட்டெபெல்லோ’ என்ற எண்ணெய் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து ஈரான் துறைமுகத்துக்கு நுழைய முயன்றது. இதில் உள்ள 28 மாலுமிகளில் 24 பேர் இந்தியர்கள். இந்த கப்பலுக்கு பிறப்பித்த அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை கடக்க முயன்றதாக அமெரிக்க ராணுவம் குற்றம் சாட்டியது.
இதையடுத்து இந்த கப்பலின் இன்ஜின் அறை மீது அமெரிக்க போர் விமானம் குண்டு வீசி முடக்கியது. இதில் இந்திய மாலுமிகள் ஆதித்ய சர்மா, சிவானந்த் சவுரேஷியா, தலைமை பொறியாளர் பட்னாலா சுரேஷ் ஆகியோர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் இந்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்வானந்த சோனோவால் கூறுகையில், ‘‘செட்டோபெல்லோ என்ற எண்ணெய் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய மாலுமிகள் 3 பேர் உயிரிழந்தது துரதிர்ஷ்டவசமானது. இந்த துயரமான நேரத்தில் உயிரிழந்த மாலுமிகளின் குடும்பத்துக்கு மோடி அரசு துணை நிற்கிறது. மீட்கப்பட்ட இந்திய மாலுமிகள் உடனடியாக நாடு திரும்புவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்த மாலுமிகளின் உடல்கள் இறுதிச் சடங்குகளுக்காக உடனடியாக இந்தியா கொண்டு வரப்படும்’’ என்றார்.
இந்தியா கண்டனம்: ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் மிகுந்த கவலையளிப்பதாக குறிப்பிட்டுள்ள இந்தியா, இப்பகுதியில் போர் பதற்றம் உடனடியாக குறைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. மேலும், டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரை அழைத்து, இந்திய மாலுமிகள் மீதான தாக்குதலுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்தது.