இம்ரான் கான் சகோதரி அலீமா
புதுடெல்லி: இந்தியாவுடன் போர் புரிய பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிர் ஏங்குவதாக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சகோதரி அலீமா தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் நிறுவனரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் 2 ஆண்டுக்கும் மேலாக ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சந்திக்க குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியானது.
இந்நிலையில், இம்ரான் கான் சகோதரி உஸ்மா கனும் நேற்று முன்தினம் சிறையில் உள்ள தனது சகோதரரை நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பிறகு இம்ரான் கான் நலமாக உள்ளார் என செய்தியாளர்களிடம் உஸ்மா தெரிவித்தார்.
இந்நிலையில், இம்ரான் கானின் மற்றொரு சகோதரி அலீமா கனும் நேற்று தனியார் ஊடகத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது கடந்த மே மாதம் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் குறித்த கேள்விக்கு அவர் அளித்த பதிலில் கூறியதாவது: பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் இந்தியாவுன் போர் புரிய ஏங்குகிறார். அசிம் முனீர் மிகத் தீவிரமாக இஸ்லாமியப்படுத்தப் பட்டவரும் கடுமையான இஸ்லாமிய அடிப்படைவாதியும் ஆவார். இதுதான் அவர் இந்தியாவுடன் போர் புரிய விரும்புவதற்கான காரணம்.
அவருடைய இஸ்லாமிய தீவிரத்தனமும் அடிப்படைவாதமும், இஸ்லாமை நம்பாதவர்களுக்கு எதிராக போராட அவரைத் தூண்டுகிறது. என்னுடைய சகோதரர் இம்ரான் கான் முழு தாராளவாதி. அவர் ஆட்சியில் இருந்தபோது, இந்தியாவுடனும் ஆளும் கட்சியான பாஜகவுடனும் நட்புடன் இருக்கவே விரும்பினார் என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால், அசீம் முனீர் இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடிக்கிறார். இம்ரான் கான் ஒரு சொத்து. அவரை சிறையிலிருந்து விடுவிக்க மேற்கத்திய நாடுகள் முயற்சி எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.