வாஷிங்டன்: பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதை கருத்தில் கொண்டு கூடுதலாக மேலும் ரூ.10,780 கோடி கடனுதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) ஒப்புதல் அளித்துள்ளது.
பாகிஸ்தான் இதுவரை காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்ததை அடுத்து தற்போது அதில் இருந்து படிப்படியாக மீண்டு வருகிறது.
இதுகுறித்து ஐஎம்எப் வெளியிட்ட அறிக்கையில், “பாகிஸ்தானின் பொருளாதார திட்டங்கள் குறித்த இரண்டு மதிப்பாய்வுகளை ஐஎம்எப் நிர்வாக குழு நிறைவு செய்துள்ளது.
பாகிஸ்தானின் பிரதான கடன் வசதியின் கீழ் ரூ.9 ஆயிரம் கோடியும், தனியாக காலநிலை சார்ந்த திட்டத்திலிருந்து மேலும் ரூ.1,780 கோடியும் நிதியுதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்து உள்ளது.
தற்போது வழங்கப்பட்ட கடனுதவியுடன் சேர்த்து பாகிஸ்தான் கடந்த ஆண்டில் இருந்து மொத்தம் ரூ.29,653 கோடியை ஐஎம்எப் இடம் இருந்து பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. புதிய கடனுதவி திட்டத்தின் கீழ் ஒப்புக் கொள்ளப்பட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், பாகிஸ்தான் 37 மாதங்களுக்குள் இந்த கடன் தவணைகளைப் பெறும். பாகிஸ்தான், பல தசாப்தங்களாக, அதன் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஐஎம்எப் மற்றும் அதன் நட்பு நாடுகளின் கடன்களை மட்டுமே நம்பியுள்ளது.