கலிபோர்னியா: தொழிலதிபர் எலான் மஸ்க் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பற்றி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது: இன்னும் 10 ஆண்டுகளில் மனிதர்கள் ஏஐ-யிடம் தங்கள் கட்டுப்பாட்டை இழப்பார்கள். 2036-ம் ஆண்டுக்குள் உலகம் ரோபோக்கள் வசம் செல்லும். ஏஐ மனிதகுலத்தையே அழிப்பதற்கு 10 முதல் 20% வாய்ப்புகள் உள்ளன.
அதிகார அமைப்பில் விரைவில் மாற்றம் ஏற்படும். அடுத்த 5 ஆண்டுகளில் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் அறிவையும் ஏஐ விஞ்சிவிடும். ஒரு விஷயத்தை மனிதர்களை விட சிறப்பாக ஏஐ மேற்கொள்ளும். ஏஐ உதவியால் மனிதர்கள் அனைவரும் நம்பமுடியாத அளவுக்கு முன்னேற்றம் அடைவர். வளம் பெறுவர். நாம் இதன் நேர்மறைப் பக்கத்தை பார்க்க வேண்டும். ஏஐ மற்றும் ரோபோக்களின் நம்பமுடியாத வேகத்தை உண்மையிலேயே தடுப்பதற்கு எந்த வழியையும் என்னால் பார்க்க முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
ஓபன் ஏஐ நிறுவனத்தின் சி.இ.ஒ சாம் ஆல்ட்மேன் சமீபத்தில் அளித்த பேட்டியில், ” ஏஐ அமைப்புகள் அதிக திறன் வாய்ந்ததாக மாறும் ஒரு சகாப்தத்திற்குள் மனிதகுலம் நுழைகிறது. ஏஐ மனிதர்களை விட அதிக அறிவாற்றலுடன் செயல்படும் காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்” என்றார். இதுபோல எதிர்கால ஏஐ மாதிரிகள் மனித தலையீடு இல்லாமலேயே தங்களை விட சக்திவாய்ந்த அடுத்த தலைமுறை பதிப்புகளை வடிவமைத்து, மேம்படுத்தி, செயல்படுத்தக் கூடும் என்று ‘ஆந்த்ரோபிக்’ நிறுவனம் கூறியுள்ளது.