உலகம்

ஈரான் போர் விளைவுகள்... சீனாவுக்கு இழப்பா, ஆதாயமா? - ஒரு தெளிவுப் பார்வை

பாரதி ஆனந்த்

போர் என்றாலே பேரழிவைத் தவிர வேறொன்றும் இல்லை. அதை மேற்கொள்ளும் நாடாக இருக்கட்டும் அல்லது இலக்காகும் நாடாக இருக்கட்டும், இரண்டுக்குமே பாதிப்பே மிஞ்சும். ஆனாலும் போர்கள் ஓய்வதில்லை. அதுவும் சமீப ஆண்டுகளாக போர்கள் மலிந்து வருகின்றன.

மாறிவரும் காலச்சூழலில் பல போர்கள் ‘அதிகார அரசியல்’ காய்நகர்த்தலாகவே இருக்கின்றன. இவற்றை முடிவு செய்வதில் உலகின் சூப்பர் பவர் நாடுகளின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது.

எந்த நாட்டில் எந்த ஆட்சி நிலவினால் தங்களுக்கு சாதகமானதை சாதித்துக் கொள்ளலாம் என்ற அளவில் உத்திகளை வகுத்து, தான் ‘டிக்’ செய்த நாடுகளை பேரத்தில், அழுத்தத்தில் படியவைக்க முயற்சித்து, அதற்கு பலன் இல்லாதபோது நேரடியாகவோ அல்லது யாரையேனும் தூண்டிவிட்டோ போர் நடத்திக் குளிர் காய்கின்றன சூப்பர் பவர் நாடுகள்.

          

இராக்கில் அணு ஆயுதங்கள் இருப்பதாகக் கூறி அந்த நாட்டையே சல்லடை போட்டு சலித்துத் தேடிய அமெரிக்கா, சதாம் ஹுசைன் கைது, மரண தண்டனைக்குப் பின்னர் எதுவும் கிடைக்கவில்லை என வடிவேலு ‘எம்ப்டி பாக்கெட்டை’ காட்டியதுபோல் கைவிரித்துவிட்டுச் சென்றது. அந்தப் பேரழிவின் பிடியிலிருந்து இராக் இன்னமும் முழுமையாக மீளவில்லை.

இப்போது அதே குற்றச்சாட்டோடு ஈரான் மீது போர் தொடுத்துள்ள அமெரிக்க, இதற்கு இஸ்ரேலையும் கூட்டுச் சேர்த்துள்ளது. கூடவே, ஈரான் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர், அதை நாங்கள் அமைக்க உதவி செய்கிறோம் என்ற அடையாளத்தை வேறு போர் மீது போர்த்தியுள்ளது அமெரிக்கா. இதை ‘ரெஜிம் கொலாப்ஸ் ஸ்ட்ரேடஜி’ (regime collapse strategy) எனப்படும் ஆட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தும் உத்தியாக அமெரிக்கா பயன்படுத்திக் கொள்கிறது.

அமெரிக்கா, இஸ்ரேலின் அதிகார அரசியலுக்காக தொடரப்பட்ட இந்தப் போர் வளைகுடா நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதோ, இன்று (மார்ச் 5-ல்) அசர்பைஜான் வரை போரின் பாதிப்பு நீண்டுள்ளது.

கடந்த மாதம் அசர்பைஜான் - அமெரிக்கா இடையே பிராந்திய பாதுகாப்பு, எரிசக்தி சார்ந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், ஈரான் அந்த நாட்டின் விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்காவுக்கு ஆதரவான நாடுகளையும் தாக்கி வலுவான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஈரான் இருக்கிறது.

போரை ஆரம்பித்துவிட்டது என்னவோ அமெரிக்கா, இஸ்ரேல்தான் . ஆனால் அதன் பாதிப்புகள் நீண்டு கொண்டே செல்கின்றன.

சீனாவின் எதிர்ப்பு:

ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலுக்கு தனது எதிர்ப்பை ஆரம்பத்தில் ‘லேசாக’ பதிவு செய்தது சீனா. அந்நாட்டின் அரசு ஊடகமான சினுவா செய்தி நிறுவனம் வெளியிட்டச் செய்தியில், “ஈரான் மீதான தாக்குதல் ஐ.நா. சாசனத்தின் மீதான வெளிப்படையான அத்துமீறல். சர்வதேச உறவுகளை கட்டமைக்கும் அடிப்படை கோட்பாடுகளில் இருந்து திட்டமிட்ட விலகல்” என்று விமர்சித்துள்ளது.

இருப்பினும், இதைத் தாண்டி பெரியளவிலான கண்டனக் குரல்களையோ, இல்லை ஈரானுக்கு தங்களது ஆதரவையோ வெளிப்படையாகவும் விரைந்தும் தெரிவிக்கவில்லை. எனினும், இந்தப் போரை நிறுத்துவதற்கு மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று சீனா இன்று அறிவித்துள்ளது.

சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கூறும்போது, “அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போரை பேச்சுவார்த்தை மூலம் நிறுத்தலாம். போரை நிறுத்துவது தொடர்பாக இரு நாடுகளும் நிதானத்தைக் கடைப்பிடிக்கலாம். இதற்காக இரு நாடுகளிடையே மத்தியஸ்தம் செய்ய சீனா தயாராக உள்ளது.

போரை நிறுத்துவது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைப் பிரதமர் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான் உட்பட வளைகுடா பிராந்தியம் முழுவதிலும் உள்ள அரசியல் தலைவர்களுடன் சீன அமைச்சர் வாங் யி தொலைபேசியில் உரையாடியுள்ளார். தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதில் ஐக்கிய அரபு அமீரகத்தை, சீனா ஆதரிக்கும். பேச்சுவார்த்தை மூலம் போரை நிறுத்த முயற்சிப்பதில் மற்ற வளைகுடா நாடுகளையும் சீனா ஆதரிக்கும்” என்றார் அவர்.

முன்னதாக, கடந்த ஜனவரியில் வெனிசுலா நாட்டுத் தலைவர் நிகோலஸ் மதுரோ சிறைப்பிடிக்கப்பட்டபோது அமெரிக்காவுக்கு சீனா தனது கடும் கண்டனங்களை தெரிவித்தது. ‘உலகத்தின் போலீஸ்காரன் / நீதிபதி’ போல் எந்தவொரு நாடும் செயல்படக் கூடாது’ என்று அப்போது அமெரிக்காவை சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி கடுமையாக விமர்சித்திருந்தார்.

அமெரிக்காவின் நடவடிக்கைகளை தொடர்ந்து விமர்சித்து வரும் சீனா இப்போது ஈரான் விவகாரத்தில் கண்டனத்தை தாண்டி என்ன மாதிரியான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறது, அதனால் சீனாவுக்கு ஆதாயமா, பாதிப்பா என்பன போன்ற விஷயங்களை பகுப்பாய்வு செய்வது அவசியமாகிறது.

பெய்டோ செயற்கைக்கோள் இடஞ்சுட்டி தொழில்நுட்பத்தின் மாதிரியை காட்சிப்படுத்திய சீனா

ஈரானுக்கு ‘பெய்டோ’ (BeiDou) என்ற செயற்கைக்கோள் இடஞ்சுட்டி அமைப்பு தொழில்நுட்பத்தை சீனா கொடுத்துள்ளது. இது அமெரிக்காவால் உருவாக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்படும் ஜிபிஎஸ்-க்கு சவால் விடக் கூடிய தொழில்நுட்பம் என்று கூறப்படுகிறது.

கடந்த 2025-ல் ஈரான் - இஸ்ரேல் இடையே நடந்த 12 நாட்கள் போரில், ஜிபிஎஸ் முடக்கம் ஈரான் மக்களுக்கும், ராணுவத்துக்கும் பெரும் இடையூறை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஜிபிஎஸ் சேவையை டீஅக்டிவேட் செய்துவிட்டு ‘பெய்டோ’ சேவைக்கு மாறியுள்ளது ஈரான். இது ஈரான் ராணுவத்துக்கு வலு சேர்த்துள்ளது. அமெரிக்க ராணுவ பலத்தை கண்காணிக்க இந்த தொழில்நுட்பம் ஈரானுக்கு பேருதவியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஈரான் மோதல் என்பது சீனாவுக்கு பல்வேறு பிரச்சினைகளையும் ஏற்படுத்தக் கூடியது. சீனாவுக்கு மிக முக்கிய எண்ணெய் வள ஆதாரம் ஈரான் தான். 2025-ம் ஆண்டில் மட்டும் ஈரானில் இருந்து 520 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை சீனா இறக்குமதி செய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக சவூதி அரேபியாவிலிருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் பெற்றுள்ளது.

இந்நிலையில், ஈரான் மோதலால் எண்ணெய் இறக்குமதியில் சீனா என்ன மாதிரியான சிக்கலை சந்திக்கும் என்பது இன்னும் சில காலத்தில் முழுமையாகத் தெரியவரும்.

என்றாலும், ஹார்முஸ் நீர்நிலையின் முடக்கம் ஏற்கெனவே எண்ணெய் ஏற்றுமதி ரீதியிலான சிக்கல்களைக் காட்ட ஆரம்பித்திவிட்டது. இது சீனாவில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி.

இந்தச் சூழலில் ஈரான் மீதான தாக்குதலில் சீனாவின் நிலைப்பாட்டைவிட, இந்தப் போரில் இருந்து சீனா எந்தவிதமான நீண்டகால ஆதாயங்களை அடையக் கூடும் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

இந்தப் போர் சீனா தன்னை அமெரிக்காவுக்கு எதிரான உலகளாவிய சமநிலையாக நிலைநிறுத்திக் கொள்ள உதவும் என்றே கணிக்கப்படுகிறது. அண்மைக் காலமாகவே அமெரிக்காவை நட்பு நாடாகக் கருதுவதில் சிக்கல் இருப்பதாக உணர்ந்த கனடா, ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் சீனாவுடனான பொருளாதார உறவுகளை வலுப்படுத்த விரும்புகின்றன. கடந்த 3 மூன்று மாதங்களில் இந்தப் போக்கு இன்னும் வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்துள்ளது.

அதை நிரூபிப்பதுபோலவே இப்போது அமெரிக்காவுடன் நட்பு பாராட்டியதற்காக தாக்குதலுக்கு உள்ளாகும் வளைகுடா நாடுகளின் மீது ஈரான் நடத்தும் தாக்குதல்கள் அமைந்துள்ளன. மேலும் ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகள் அமெரிக்கா மீது வைத்துள்ள பாதுகாப்பு ரீதியிலான நம்பிக்கைகளையும் கேள்விக் குறியாக்கியுள்ளது.

அதேவேளையில், அமெரிக்காவும் தனது வெளியுறவுக் கொள்கையின் பார்வைக் குவியலை ஐரோப்பா, மத்திய கிழக்கில் இருந்து இந்தோ - பசிபிக் பிராந்தியத்துக்கு மாற்றி சீனாவுக்கு கடுமையான சவாலை முன்வைக்க நீண்டகாலமாகவே விரும்பி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இத்தகைய பின்னணியில் ஈரான் போரின் போக்கு என்னவாக இருக்கும் என்பதை இப்போதே கணிக்க முடியாது என்று சிலரும், இந்தப் போர் நீண்டு கொண்டே செல்லலாம் என்று சிலரும் கணிக்கின்றனர். அதனால், இப்போதைக்கு தனது வெளியுறவுக் கொள்கைகளை ஆசியாவை மையப்படுத்தி முன்னெடுக்கும் அமெரிக்காவின் வாய்ப்பும் தள்ளிப்போகலாம் என்பது சீனாவின் கணிப்பு மட்டுமல்ல, அதற்கு ஆதாயமும் கூட.

ஏற்கெனவே 2000-களில் ஆரம்ப காலத்திலேயே மத்திய கிழக்கில் இராக் மீதான போர், ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக முன்னெடுத்த போர் என்று ஒரு தசம காலத்துக்கும் மேலாக தொலைத்துவிட்டது அமெரிக்கா. இதனால், சீனா தனது ஆதிக்கத்தை கணிசமாக உயர்த்திக் கொண்டது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், ஈரானில் அமெரிக்கா நீண்ட கால போரை மேற்கொண்டால், அதன் ராணுவ பலம் குறைவதோடு, இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் தனது கவனத்தை செலுத்த முடியாமல் போவதோடு, ஆசியாவில் சீனா தன்னை வலுவான பிராந்திய உத்தியாளராக மாற்றிக் கொள்ளக் கூடிய வாய்ப்பை தோதாக்கிக் கொடுக்கும் என்றும் கணிக்கப்படுகிறது.

சர்வதேச உறவுகளில் முக்கியத்துவம், ஆசிய பிராந்தியத்தில் வலுவான இடம் தாண்டி ஈரான் போர் மூலம் சீனா அறுவடை செய்யக் கூடிய இன்னொரு நீண்ட கால பலனும் இருக்கிறது. ஈரான் போர் மூலம் அமெரிக்க, இஸ்ரேலிய ஆயுதங்கள் பற்றிய ஆராய்ச்சியை முன்னெடுப்பதும், குறிப்பாக புதிய ட்ரோன்கள் பற்றி தெரிந்துகொள்ளவும், போர் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள வசதியான களம் சீனாவுக்குக் கிடைத்திருக்கிறது.

இவற்றையெல்லாம் வைத்து, ஈரான் போரால் சீனாவுக்கு ஏற்படப் போகும் பொருளாதார பாதிப்பு என்பது குறுகிய காலத்துக்கானதாகவும், காலப்போக்கில் சீனா தனது ஆதிக்கத்தை ஆசியா மற்றும் பிற நாடுகளில் அதிகரிக்க முக்கியமான அடித்தளமாக அமைவது என்பது நீண்ட காலத்துக்கான ஆதாயமாகவும் இருக்கக் கூடும் என சர்வதேச உறவுகள் பற்றி ஆராயும் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

உறுதுணைக் கட்டுரை: தி கான்வர்சேஷன்

SCROLL FOR NEXT