சனா: ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு ஏமனில் உள்ள ராணுவப் பயிற்சி முகாம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கடந்த செப்டம்பரில் போர் தீவிரமடைந்த பிறகு பதிவான மிக மோசமான உயிரிழப்பு சம்பவம் இதுவாகும்.
ஷப்வா மாகாணத்தில் உள்ள அல்-அலம் முகாம் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஏமனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசுக்கு ஆதரவான புதிய வீரர்களைச் சேர்த்துக் கொள்ளும் முகாம் இதுவாகும். ஜர்தான் மாவட்டத்தில் புதிய வீரர்கள் அணிவகுப்பில் நின்றுகொண்டிருந்தபோது மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகள் இந்த முகாமின் மீது அடுத்தடுத்து விழுந்து வெடித்தன.
காயமடைந்தவர்கள் உடனடியாக அடாக் மாகாண தலைநகரில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்க ரத்த தானம் செய்யுமாறு அதிகாரிகள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த தாக்குதலை ஒரு மாபெரும் பேரிடர் என்று வர்ணித்துள்ள அரசு, இவ்வளவு அதிகமான வீரர்களை ஏன் பாதுகாப்பற்ற முறையில் திறந்தவெளியில் நிறுத்தி வைத்திருந்தார்கள் என்பது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று தெரிவித்துள்ளது.
ஏமனின் தலைவர் ரஷாத் அல்-அலிமி, கொல்லப்பட்டவர்கள் அனைவரும் புதிய வீரர்கள் என்று கூறி, இதற்கு உடனடியாகப் பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், ஹவுதி படைகள் தங்களுடைய சதித்திட்டங்கள் தோல்வியடையும் போதெல்லாம் இது போன்ற கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் சாடியுள்ளார். முன்னதாக ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டனியோ குட்டெரெஸைத் தொடர்பு கொண்டு பேசிய அவர், ஹவுதிகளை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
ஷப்வா மாகாண நிர்வாகம் இந்தத் தாக்குதலை ஒமாகாணப் பாதுகாப்பிற்குக் குந்தகம் விளைவிக்கும் அப்பட்டமான செயல் என்று கண்டித்துள்ளது. மாகாண ஆளுநர் அவாத் பின் அல்-வசிர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வீரர்களை நேரில் சென்று பார்வையிட்டார்.
மறுபுறம், சவுதி அரேபியாவின் ஆதரவு பெற்ற படைகளையே அல்-அலம் முகாமில் குறிவைத்துத் தாக்கியதாக ஹவுதி ராணுவ செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். சவுதி அதிகாரிகளால் நடத்தப்படும் இந்த முகாமில் சவுதி அதிகாரிகளும் கொல்லப்பட்டதாக அவர் வாதிட்டுள்ளார். மேலும், சவுதி அரேபியாவின் நிதி ஊக்கத்தொகையை நம்பி மோதலில் இணைய வேண்டாம் என்று புதிய வீரர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த செப்டம்பரில் தொடங்கிய இந்த புதிய தாக்குதல்கள் மூலம் பாப் அல்-மந்தப் நீரிணைப்பைக் கைப்பற்ற ஹவுதிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, சவுதி வான்வழித் தாக்குதல்களில் பொதுமக்கள் பலியாவதும், சவுதியின் அராம்கோ எண்ணெய் நிறுவனம் மற்றும் ரியாத் விமான நிலையம் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதாலும் இப்பகுதியில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.