லாஸ் ஏஞ்சல்ஸ்: இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்தின் மாயப்பூரை தலைமையிடமாகக் கொண்டு அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) செயல்படுகிறது.
உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இஸ்கான் கோயில்கள் உள்ளன. அமெரிக்காவில் மட்டும் 56 கோயில் களும், 80-க்கும் மேற்பட்ட இஸ்கான் கிளைகளும் உள்ளன.
இந்த சூழலில் இஸ்கான் அமைப்பு சார்பில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அண்மையில் பிரம்மாண்ட ரத யாத்திரை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
இந்த ரத யாத்திரையில் பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் பங்கேற்றார். அப்போது இஸ்கான் பக்தர்களோடு இணைந்து அவர் செல்பி புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஹாலிவுட் பிரபலங்கள் ராபர்ட் டவுனி ஜூனியர், வில் ஸ்மித், ஜெராட் பட்லர், ஜூலியா ராபர்ட்ஸ், ஹக் ஜாக்மேன், மடோனா உட்பட பலர் இந்து மதத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கைவைத்து உள்ளனர். இஸ்கான் ரத யாத்திரையில் அர்னால்டு பங்கேற்றது ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.