வாஷிங்டன்: அமெரிக்காவில் வசிக்கும் இந்துக்கள் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டாம். அவரவர் வீடுகளில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுங்கள் என்று பல்வேறு இந்து அமைப்புகள் அறிவுறுத்தி உள்ளன.
அமெரிக்காவில் சுமார் 55 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். கலிபோர்னியா, டெக்சாஸ், நியூஜெர்ஸி, நியூயார்க், புளோரிடா உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் இந்தியர்கள் மீதான இனவெறி தாக்குதல் அதிகரித்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியின்போது அமெரிக்காவில் வசிக்கும் இந்துக்கள் பொது இடங்களில் ஒன்றுகூடி பிரம்மாண்டமாக விழாவை கொண்டாடுவது வழக்கம்.
ஆனால் அமெரிக்காவின் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு பல்வேறு இந்து அமைப்புகள் சமூக வலைதளங்கள் வாயிலாக இந்துக்களுக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கி வருகின்றன.
அந்த அமைப்புகள் வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவில் வசிக்கும் இந்துக்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டுகிறோம். குடியிருப்புகள், காலனிகள், சாலைகள், தெருக்கள், பொது இடங்களில் விழாவைக் கொண்டாட வேண்டாம். இவ்வாறு இந்து அமைப்புகள் அறிவுறுத்தி உள்ளன.