எவியான் (பிரான்ஸ்): “வளர்ச்சி என்பது யாருக்காக? யாருடன் இணைந்து? எந்த திசையில் என்பதுதான் முக்கியமான கேள்வி” என்று ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
பிரான்ஸின் ஏவியான் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில், அனைவருக்கும் சமச்சீரான, பகிரப்பட்ட, நிலையான பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுத்தல் என்ற தலைப்பிலான அமர்வில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
அவர் தனது உரையில், “பிரான்ஸ் தலைமையிலான இந்த ஜி7 உச்சி மாநாடு, இந்த தலைப்புக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. இன்றைய யதார்த்தம் என்னவென்றால், வளர்ச்சி என்பது, மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அல்லது வர்த்தக புள்ளி விவரங்கள் பற்றியதாக இருக்கக் கூடாது. வளர்ச்சி யாருக்காக? யாருடன் இணைந்து? எந்த திசையில் என்பதுதான் முக்கியமான கேள்வி.
கூட்டு வளர்ச்சி என்பது லட்சியங்களை அடைய உதவும் என்பதை இந்தியாவின் அனுபவம் நிரூபித்திருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் என்பது அனைவரையும் உள்ளடக்கியது, பரந்த அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது, ஜனநாயக ரீதியாக அதிகாரமளித்தலை அடிப்படையாகக் கொண்டது.
இது, அனைவருடனும் இணைந்து, அனைவரின் நம்பிக்கையுடன், அனைவரின் முயற்சியுடன், அனைவரும் வளர்ச்சி காண்பது என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. இந்தியாவின் ஜி20 தலைமை, இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதார வழித்தடம் அறிமுகம் போன்ற எண்ணற்ற நிகழ்வுகளில் இது பிரதிபலித்துள்ளது.
மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடியால், எரிபொருள், உரம், உணவு விநியோகச் சங்கிலிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், வளரும் நாடுகள் நிறைந்த உலகின் தெற்கு பிராந்தியத்தின் மீது நீண்ட காலத்துக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். சர்வதேச ஒற்றுமையை நாம் உண்மையாகவே வலுப்படுத்த விரும்பினால், மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகள் இந்த நெருக்கடிகளின் சுமையை சுமக்கும்படி விட்டுவிடக்கூடாது.
வளரும் நாடுகள் இந்த அதிர்வுகளைத் தாங்கிக் கொள்ளவும், தங்கள் பொருளாதார வலிமையைத் தக்கவைத்துக் கொள்ளவும் உதவும் வகையில் நமது சர்வதேச நிதி நிறுவனங்கள் ஆதரவாக செயல்பட வேண்டும்.
ஜி7 நாடுகளின் மூலதனம், இந்தியாவின் திறமை, உலகின் தெற்கு நாடுகளின் பங்களிப்பு ஆகியவற்றை ஒன்றிணைப்பதன் மூலம், இணைப்பு மற்றும் வர்த்தகத்தை விரைவுபடுத்துவதற்கான சர்வதேச கூட்டாண்மையை (International Mobilisation Partnership for Accelerating Connectivity and Trade - IMPACT) நிறுவ முடியும்.
இன்று பல சமூகங்கள் வயதான சமூகங்களாக மாறி வரும் வேளையில், இந்தியாவிலும் உலகின் தெற்கு நாடுகளிலும் இளம் திறமையாளர்கள், தொழில்முனைவோர்கள் ஏராளமாக உள்ளனர். இந்த சக்தியை நாம் இயல்பாக பயன்படுத்திக் கொள்வதன் மூலம் திறன்மிகு கட்டமைப்புகளை உருவாக்குவதிலும், திறன்சார் இடப்பெயர்வை ஊக்குவிப்பதிலும் நாம் இணைந்து பணியாற்ற முடியும்” என்று பிரதமர் மோடி பேசினார்.
இந்த மாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.