வாஷிங்டன்: அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி மாபெரும் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும்தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள நிலையில், இத்தேர்தல் முடிவு அமெரிக்க வரலாற்றில் ஒரு மிகப்பெரிய பின்னடைவு என அதிபர் டொனால்ட்ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தமது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டுள்ள அதிபர் ட்ரம்ப், இத்தேர்தல் முடிவுகளால் அமெரிக்கப் பங்குச் சந்தையில் ஒரே நாளில் சுமார் 3 டிரில்லியன் டாலர் அளவுக்குப் பிரம்மாண்ட இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவர் தனது பதிவில், “கடந்த தேர்தல் முடிவுகளின் மூலம் அமெரிக்கா வரலாற்றில் ஒரு மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. ட்ரம்ப் ஆட்சியில் ஒரு ராக்கெட் போல உயர்ந்து வந்த பங்குச் சந்தை கூட, ஒரே நாளில் 3 டிரில்லியன் டாலர் இழப்பைச் சந்தித்துள்ளது. ஆனால் யாரும் பயப்பட வேண்டாம், நாங்கள் முன்பை விட மிகவும் வலுவாகவும் பிரம்மாண்டமாகவும் மீண்டு வருவோம்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 3-ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி சந்தித்த தோல்வி, அதிபர் ட்ரம்பிற்கு ஏற்பட்ட மாபெரும் அரசியல் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. குடியரசுக் கட்சி வேட்பாளர்களுக்காக தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ட்ரம்ப், இத்தேர்தலைத் தமது ஆட்சி மீதான வாக்கெடுப்பாகவே கருத வேண்டும் என்று வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.
தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே, "நான் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடவில்லை; ஒருவேளை நான் போட்டியிட்டிருந்தால் மிகப்பெரிய வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றிருப்போம்" என்றார்.
பிரச்சாரக் கூட்டங்களுக்குப் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தைப் பார்த்து குடியரசுக் கட்சி சிறப்பாகச் செயல்படும் என தாம் எதிர்பார்த்ததாக அவர் தெரிவித்தார்.