“சம்பளத்தில் பாதியை ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்க இழப்பதா அல்லது குழந்தைக்கு ஒருவேளை உணவு வாங்க அந்தப் பணத்தைச் சேமிப்பதா?” - இது ஏதோ கற்பனைக் கேள்வியல்ல. பாகிஸ்தானின் ஒவ்வொரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவரும் தினசரி சந்திக்கும் கோர நிஜம். பசியோடு தூங்கச் செல்லும் மனிதனுக்கு, இரவில் மின்சாரம் இல்லாததும், காலையில் வாகனத்தில் பெட்ரோல் இல்லாததும் வெறும் அசவுகரியம் அல்ல... அது வாழ்வாதாரத்தின் மீதான நேரடித் தாக்குதல்.
பாகிஸ்தானில் வாழும் எளிய மக்களின் ஒவ்வொரு விடியலும் போராட்டம்தான். பெட்ரோல் பங்க்குகளில் பல கிலோ மீட்டருக்கு நீளும் வரிசைகள், இருளில் மூழ்கும் வீடுகள், தெருக்கள், எரிபொருள் தட்டுப்பாடு, பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு, விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு என ஒரு நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்தால், அது சாமானிய மனிதனை எப்படி வீதிக்குக் கொண்டுவரும், சமையலறையையும் வாகனத்தையும் எப்படிப் பாதிக்கும் என்பதற்கு பாகிஸ்தானே தற்போதைய நேரடி உதாரணம்.
கொரோனா தொற்று காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட கடும் கட்டுப்பாடுகளை விட கடுமையான விதிகளை பாகிஸ்தான் அரசு திடீரென நாடு முழுவதும் கடுமையாக அமல் செய்துள்ளது. சர்வதேச அரசியல் சண்டைகளுக்கும், உள்நாட்டு நிர்வாகச் சீர்கேடுகளுக்கும் பாகிஸ்தான் சாமானியனின் அன்றாட வாழ்வாதாரம் விலையாக கொடுக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைவாசி உயர்வும், தட்டுப்பாடும் சேர்ந்த நெருக்கடி அவர்களை இந்த நிலைக்குத் தள்ளியிருக்கிறது.
பாகிஸ்தானின் தற்போதைய நிலை என்ன?
2026 செப்டம்பர் நிலவரப்படி, அந்நியச் செலாவணி கையிருப்பு 21.39 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது (இது கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத உச்சமாகும்). தற்போதைய கையிருப்பு மூலம் பாகிஸ்தானால் 3 மாதங்களுக்கு மேலான இறக்குமதிகளை மேற்கொள்ள முடியும்.
பாகிஸ்தானின் மொத்த வெளிநாட்டுக் கடன் 138.8 பில்லியன் டாலர்களாக உள்ளது. இதில் சுமார் 30% கடன் சீனாவுக்குத் தர வேண்டும். கடன் வட்டி மற்றும் அசல் தொகையைத் திருப்பிச் செலுத்தவே ஆண்டுக்கு 11 பில்லியன் முதல் 12 பில்லியன் டாலர்கள் தேவைப்படும். பாகிஸ்தான் சர்வதேசச் சந்தையில் 3 பில்லியன் டாலர் மதிப்பிலான யூரோபாண்டுகளை வெற்றிகரமாக விற்றதாலும், சர்வதேச பண நிதியத்திடம் 7 பில்லியன் கடன் கிடைத்ததாலும் தப்பித்துள்ளது.
ஏன் திடீர் எரிபொருள் தட்டுப்பாடு?
பாகிஸ்தான் தனது எரிபொருள் தேவையில் 85 சதவீதத்தை இறக்குமதி மூலமே நிறைவேற்றுகிறது, அதிலும் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளான சவுதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகத்தில் குவைத், ஈரான், சிங்கப்பூர் நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய், சமையல் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்கிறது.
ஈரான் - அமெரிக்கப் போரால் ஹார்மூஸ் நீரிணை மூடப்பட்டதாலும், சவுதி அரேபியா குழாய் வழியே கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் ‘கிழக்கு - மேற்கு’ வழியை 6 மாதங்களாக மூடப்பட்டதாலும் பாகிஸ்தான் நிலைமை மேலும் மோசமாகியுள்ளது. செப்டம்பர் 18 நிலவரப்படி பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் 390.79 ரூபாயாகவும், டீசல் லிட்டர் 424.92 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
விலைவாசி கடும் அதிகரிப்பு ஏன்?
சர்வதேச பண நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளுக்கு உட்பட்டு இயங்கி வருகிறது பாகிஸ்தான். மத்திய வங்கியிடம் போதுமான டாலர் கையிருப்பு இல்லாததால், இறக்குமதி கடிதங்களை வங்கிகளால் வழங்க முடியவில்லை. இதனால் சர்வதேசச் சந்தையில் அதிக விலை கொடுத்து உடனடி எரிபொருள் கப்பல்களை வாங்க முடியவில்லை.
மேலும், ஐஎம்எஃப் நிபந்தனைப்படி அரசு வழங்கி வந்த எரிபொருள் மானியங்களை ரத்து செய்ததால், சர்வதேசச் சந்தையின் அதிகப்படியான விலை நேரடியாக சாமானிய மக்கள் தலையில் விழுந்தது.
சராசரி பெண்ணின் வேதனை இதுதான்...
தெற்காசியாவில் 200 கோடி மக்கள் வாழும் நிலையில், கச்சா எண்ணெய் சப்ளை தடைபட்டதால் பாகிஸ்தான் நிலைமை படுமோசமான நிலையை எட்டியுள்ளது. கராச்சியைச் சேர்ந்த சஜீதா ஜிப்ரன் (45) என்பவர் அளித்த பேட்டியில், “என் வீட்டு வாடகை 15,000-ல் இருந்து 25,000 ஆக உயர்ந்துவிட்டது.
போருக்கு முன்பாக இறைச்சி, பால் சாப்பிட முடிந்தது. ஆனால் இப்போது காய்கறிகள்கூட வாங்க முடியவில்லை. சமையல் எரிவாயு விலை 2,000 ஆக அதிகரித்துள்ளது. குழந்தைகளின் உணவுக்குத்தான் முன்னுரிமை கொடுக்க முடிகிறது. கல்விக்கான கட்டணத்தை செலுத்த முடியாததால் படிப்பை நிறுத்திவிட்டனர்” எனக் கண்ணீருடன் தெரிவித்தார்.
உணவுப் பொருட்கள் விலையும் அதிகரித்துள்ளது. 20 கிலோ கோதுமை மாவு பாக்கெட் ரூ.2,650, உருளைக்கிழங்கு கிலோ ரூ56, தேயிலை 200 கிராம் ரூ.463, ஒரு டஜன் முட்டை ரூ.257, சமையல் எண்ணெய் லிட்டர் ரூ.3,077, பால் லிட்டர் ரூ.218, மாட்டிறைச்சி கிலோ ரூ.1,267, தக்காளி கிலோ ரூ.230 ஆக உயர்ந்துள்ளது. இந்திய மதிப்பில் ஒரு ரூபாய் என்பது பாகிஸ்தானில் ரூ.2.90 ஆகும்.
திடீர் கட்டுப்பாடுகள் என்னென்ன?
பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு நாடு முழுவதும் விதித்துள்ள அவசரக் கட்டுப்பாடுகள்:
1. அரசுத் துறைகளில் புதிதாக எந்த வாகனமும் வாங்கத் தடை, ஆடம்பரப் பொருட்கள் வாங்கத் தடை.
2. உயர்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகள் தவிர மற்ற அதிகாரிகள் அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும்.
3. ராணுவம் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகளைத் தவிர்த்து, பிற அரசு அதிகாரிகளின் வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு பாதியாகக் குறைப்பு.
4. ஆடம்பரத்தைச் தவிர்க்கும் வகையில், திருமண நிகழ்வுகளில் விருந்தினர்களுக்கு ஒரே ஒரு உணவு வகை மட்டுமே பரிமாறப்பட வேண்டும்.
5. மின்சாரம், எரிபொருள் சிக்கனத்தை கடைபிடிக்க வணிகக் கடைகள் இரவு 9 மணி வரையும், உணவகங்கள் இரவு 11 மணி வரையும், திருமண மண்டபங்கள் இரவு 10 மணி வரையும் செயல்பட அனுமதி.
6. அரசு அதிகாரிகளின் வெளிநாட்டு பயணம் செய்யத் தடை. அவசியமான பயணங்களுக்கு அமைச்சர்கள் எகானாமி வகுப்பில் செல்ல அனுமதி.
7. அரசு ஆலோசனைக் கூட்டங்களை ஆன்லைன் மூலமே நடத்த வேண்டும். பயிற்சி வகுப்புகள், மாநாடுகள் நடத்தத் தடை.