உலகம்

“பிரான்ஸ் கலவரங்களுக்கு புலம்பெயர் இஸ்லாமியர்கள் காரணமல்ல” - மேக்ரான்

மோகன் கணபதி

தோஹா (கத்தார்): பிரான்ஸில் நடந்த போராட்டங்கள் மற்றும் கலவரங்களுக்கு புலம்பெயர்ந்த இஸ்லாமியர்களே காரணம் என்ற குற்றச்சாட்டு முட்டாள்தனமானது என்று அந்நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸில் விலைவாசி கடுமையாக உயர்ந்ததைக் கண்டித்து அந்நாட்டில் நடத்தப்பட்ட போராட்டங்கள் பின்னர் கலவரங்களாக மாறின. பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுக்கும் இவை வழிவகுத்தன. பிரான்ஸில் நிலவும் பரபரப்பான சூழலுக்கு மத்தியில், வளைகுடாவின் முக்கிய எரிசக்தி விநியோக நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இம்மானுவேல் மேக்ரான், தனது பயணத்தின் இறுதியாக கத்தாருக்கு வருகை தந்தார்.

பிரான்ஸில் நடந்த கலவரங்களுக்கு இஸ்லாமிய புலம்பெயர்ந்தோரே காரணம் என்றும், உங்கள் எல்லைகளை மூடி நிலைமை கைமீறிப் போவதற்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வாருங்கள் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறி இருப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த இம்மானுவேல் மேக்ரான், “கடந்த வார இறுதியில் பாரிஸிலும், பிரான்ஸின் பிற நகரங்களிலும் நடந்த சம்பவங்களை சில வெளிநாடுகள் திட்டமிட்டு திரிக்கின்றன.

இதன் விளைவாக, வெளிநாட்டுத் தலைவர்கள் உட்பட பலர், ஏற்றுக்கொள்ள முடியாத முற்றிலும் முட்டாள்தனமான கருத்துகளை தெரிவித்துள்ளனர்” என்று கூறினார்.

நீங்கள் டொனால்டு ட்ரம்ப்பை குறிப்பிடுகிறீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “வெளிநாட்டுத் தலைவர்கள் பலரில் அவரும் ஒருவர்” என தெரிவித்தார்.

மேலும் இம்மானுவேல் மேக்ரான், “பிரான்ஸில் நடக்காத சம்பவங்கள் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டு பரப்பப்பட்டுள்ளன. பிரான்ஸ் மீது புலம்பெயர்ந்தவர்களும் இஸ்லாமியர்களும் படையெடுத்துவிட்டதாகச் சிலர் கூறுகின்றனர். இது முற்றிலும் பொய்யான தகவல்.

உண்மை என்னவென்றால், பிரான்ஸ் குறித்து அவதூறாகப் பேசுபவர்கள் எவருக்கும் பிரான்ஸ் மீது அன்பு இல்லை. அத்தகைய நபர்கள் மிகுந்த எரிச்சலூட்டுகிறார்கள்.

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள தலைவர்கள், அது ஐரோப்பிய பிராந்தியத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி அல்லது அட்லாண்டிக் கடலுக்கு அப்பால் உள்ளவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் சில சமயங்களில் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களை அறியாமலேயே மீண்டும் மீண்டும் பகிர்கிறார்கள்.

அதோடு, பிரான்ஸில் நடந்தவை குறித்து சில குறிப்பிட்ட தரப்பினர் திட்டமிட்டு பரப்பும் கருத்துகளை அப்படியே முன்வைக்கிறார்கள். அவர்கள் தங்கள் சொந்த அரசியல் பிரச்சாரங்களுக்காக பிரான்ஸை பயன்படுத்திக் கொள்கிறார்கள். இது எங்களுக்குத் தேவையில்லை” என தெரிவித்தார்.

முன்னதாக, ஐக்கிய அரபு அமீரகத்திடம் இருந்து கூடுதலாக மாதம் ஒன்றுக்கு ஒரு லட்சம் டன் டீசலைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தை இம்மானுவேல் மேக்ரான் உறுதி செய்தார். மேலும், இதே அளவு டீசலை பஹ்ரைனிடம் இருந்தும் பெறுவதற்கான முயற்சியில் அவர் உள்ளார். பிரான்சில் நிலவும் எரிசக்தி நெருக்கடி, அதிகரித்து வரும் எரிசக்தி விலை, எரிபொருள் விநியோகம் ஆகியவற்றுக்குத் தீர்வு காணும் முனைப்பில் இம்மானுவேல் மேக்ரான் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT