உலகம்

பிரான்ஸில் மக்கள் போராட்டம் வெடித்தது ஏன்? - உண்மை நிலவரமும் பின்புலமும்

போத்தி ராஜ்.க

“நாங்கள் வாழ்கிறோமா அல்லது உயிர் வாழ்வதற்காகப் போராடுகிறோமா?” - இதுதான் இன்றைய பிரான்ஸ் நாட்டு நடுத்தர மக்களின் மனதை வாட்டும் ஒற்றைக் கேள்வி.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற முழக்கத்துக்குச் சொந்தமான பிரான்ஸ் நாடு, இன்று தனது வரலாற்றின் மற்றொரு கொந்தளிப்பான தருணத்தைக் கடந்து வருகிறது.

மாத வருமானம் உயரவில்லை, ஆனால் உணவுப் பொருட்களின் விலையும், எரிபொருள் கட்டணமும், வீட்டு வாடகையும் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்திருப்பதால் எளிய மக்களின் அன்றாட வாழ்க்கை நரகமாகியுள்ளது.

அரசாங்கத்தின் அலட்சியப் போக்கும், பொருளாதாரப் பளுவும் தங்களை முடக்கிவிட்டதாகக் கருதும் மக்களின் அடிமனக் கோபம்தான் இன்று மாபெரும் பேரணிகளாக வெடித்துச் சிதறிக்கொண்டிருக்கிறது. பாரிஸின் வீதிகளில் கண்ணீர்ப்புகைக் குண்டுகளின் புகையும், தீப்பற்றி எரியும் பாரம்பரிய கட்டிடங்களும், வாகனங்களும் மக்களின் ஆழமான ஆதங்கத்தின் வெளிப்பாடாகும்.

தலைநகர் பாரிஸ் முதல் மார்சாய், லியோன் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வரை தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என லட்சக்கணக்கில் வீதியில் போராடி வருகிறார்கள். அமைதியான முறையில் தொடங்கிய இந்தப் பேரணிகள், சில இடங்களில் வன்முறையாகவும் மோதல்களாகவும் மாறியிருப்பது ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், மேக்ரான் அரசுக்குக் கடுமையான அரசியல் சவாலையும் உருவாக்கியுள்ளது.

தற்போதைய பிரான்ஸ் நிலவரமானது ஒரு நாட்டின் உள்நாட்டுப் பொருளாதார நெருக்கடி எவ்வாறு சமூக அமைதியின்மையை உருவாக்குகிறது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம்.

பணவீக்கம், மாணவர்களின் கல்வி மற்றும் உறைவிடப் பிரச்சினைகள் மற்றும் தொழிற்சங்கங்களின் கூட்டு எதிர்ப்புகள் ஆகியவை இணைந்து பிரான்ஸை ஒரு மாபெரும் போராட்டக் களமாக மாற்றியுள்ளன. அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான இந்த மோதல் வெறும் சட்டம் - ஒழுங்குப் பிரச்சினை மட்டுமல்ல. இது ஐரோப்பியப் பிராந்தியத்தில் நிலவும் ஆழமான கட்டமைப்புச் சீர்குலைவின் வெளிப்பாடாகும். அரசின் அடக்குமுறைகளையும் மீறி, தங்கள் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடும் மக்களின் உத்வேகம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

ஐரோப்பாவிலும் இதே நிலைதான்!

மக்களின் எழுச்சியும் போராட்டமும் பிரான்ஸில் மட்டும் நடக்கவில்லை. இத்தாலி, பெல்ஜியம், போர்ச்சுகல், அல்பேனியா, ஆஸ்திரியா, ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் போராட்டம் வெடித்துள்ளது.

நாடுகள் வேறுபட்டாலும், மக்களின் கோரிக்கைகள் பெரும்பாலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, விலைவாசி உயர்வு, பணவீக்கம், தரமான கல்வியின்மை, வீட்டுவசதிப் பிரச்சினை என மனிதர்களின் அடிப்படைத் தேவைக்கான பிரச்சினையாகவே இது உள்ளது. உக்ரைன் போருக்குப் பிந்தைய எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பணவீக்கத்தால் சாமானிய, நடுத்தர மக்களும் மாணவர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

போராட்டத்தின் தொடக்கப்புள்ளி என்ன?

பிரான்ஸில் நடக்கும் போராட்டத்தின் தொடக்கப்புள்ளி கடந்த மாதம் மாணவர்களிடம் இருந்துதான் தொடங்கியது. கல்வியின் தரம் சரியில்லை, உள்கட்டமைப்பு இல்லை, ஆசிரியர் நியமனம் இல்லை, பள்ளியின் கல்வி நேரம் அதிகம் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பள்ளி மாணவர்கள் முதலில் போராட்டம் நடத்தினர்.

பாரிஸ் மற்றும் முக்கிய தொழில் நகரங்களில் தொடங்கிய போராட்டம் படிப்படியாக வளர்ந்து, பல்கலைக்கழக மாணவர்களும் தொழிற்சங்கங்களும் இணைந்ததால் விஸ்வரூபம் எடுத்தது. ஏறக்குறைய ஒரு மாதமாகப் பல்வேறு நகரங்களில் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

சிறிய அளவில் தொடங்கிய போராட்டத்தில் இன்று நாடு முழுவதும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீதிகளில் களமிறங்கிப் போராடி வருகின்றனர். இதுவரை 2,000-க்கும் மேற்பட்ட மக்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸ் அரசில் என்ன பிரச்சினை?

பிரான்ஸில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு அதிகளவில் செலவிடப்படுகிறது. ஆனால், போர் போன்ற அவசரநிலைகள் ஏதுமில்லாத சூழலிலும் அரசின் செலவினங்கள் தொடர்ந்து வருவாயை விட அதிகமாக இருப்பதுதான் உண்மையான சிக்கலாகும்.

2025-ம் ஆண்டில் பிரான்ஸின் நிதிப் பற்றாக்குறை அதன் ஜிடிபியில் 5.1 சதவீதமாகவும், பொதுக் கடன் 115.5 சதவீதமாகவும் இருந்தது. பிரான்ஸின் பொதுக்கடன் 3.596 டிரில்லியன் யூரோக்களாக உயர்ந்துள்ளது. கடனுக்கான வட்டி மட்டுமே ஆண்டுக்கு 67 முதல் 77 பில்லியன் யூரோக்கள் வரை ஆகிறது. இது அரசு தனது ராணுவத்திற்கு ஒதுக்கும் நிதியை விட அதிகம்.

கரோனா தொற்று காலத்தில் வழங்கப்பட்ட நலத்திட்டங்களும், ரஷ்யா - உக்ரைன் போரால் ஏற்பட்ட எரிபொருள் விலை உயர்வும் நாட்டை மாபெரும் பொருளாதார நெருக்கடியில் தள்ளின. இதனால் பிரான்ஸ் அரசு சொல்ல முடியாத பொருளாதாரச் சிக்கலில் சிக்கித் தவிக்கிறது. இந்தப் பொருளாதாரச் சிக்கலிலிருந்து தப்பிக்கத்தான் அரசு 54 பில்லியன் யூரோ செலவினக் குறைப்பை அமல்படுத்தியது. இதன் விளைவாகக் கல்வி நிதி குறைக்கப்பட்டு, ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதுதான் போராட்டத்தின் தொடக்கப்புள்ளியாக மாறியது.

பொருளாதாரச் சூழல்

>>பணவீக்கம்: பிரான்ஸில் நுகர்வோர் விலை பணவீக்கம் 3.1% ஆகப் பதிவாகியுள்ளது. ஐரோப்பிய யூனியனின் பொதுவான பணவீக்க அளவீட்டின்படி (HICP), பிரான்ஸின் பணவீக்கம் 3.4% வரை உயர்ந்துள்ளது. இது நடுத்தர மக்களின் வாங்கும் சக்தியைப் பெரிதும் பாதித்துள்ளது.

>>விலைவாசி உயர்வு: உணவுப் பொருட்கள், எரிபொருள் (பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு) மற்றும் மின்சாரக் கட்டணங்கள் பெருமளவு உயர்ந்துள்ளன. எரிபொருளுக்கான பணவீக்கம் 21.3% என்ற உச்சத்தை எட்டியுள்ளது.

எந்தெந்த நகரங்களில் போராட்டம் தீவிரம்?

பாரிஸ், மார்சாய், லியோன், நைஸ், போர்டோ, நாண்ட்ஸ், ரில், துலூஸ், ஸ்ட்ராஸ்பேர்க் மற்றும் லிமோஜஸ் ஆகிய நகரங்களில் மக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, லிமோஜஸ் நகரில் 140 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க நகராட்சி கட்டிடம் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

வன்முறைக்கான பின்னணி: யார் இதில் ஈடுபடுகிறார்கள்?

பெருமளவிலான மக்கள் அமைதியான பேரணிகளில் ஈடுபட்டாலும், முகமூடி அணிந்த தீவிர இடதுசாரி குழுக்களும், சூறையாடல்களில் ஈடுபடும் வன்முறை கூட்டங்களும் கடைகளை அடித்து உடைத்து வருவதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வன்முறை மற்றும் சூறையாடல்களில் புலம்பெயர்ந்த இளைஞர்களும் ஈடுபடுவதாக வலதுசாரி அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், இந்தப் பொருளாதார நெருக்கடி புலம்பெயர்ந்தோரையும் மிகக் கடுமையாகப் பாதித்துள்ளதால், அவர்களும் போராட்டங்களில் பங்கேற்றுள்ளனர் என்று இடதுசாரி கட்சிகள் தெரிவிக்கின்றன. எனினும், இதை முழுமையாகப் புலம்பெயர்ந்தோரின் கலவரம் என்று கூற முடியாது; இது ஒட்டுமொத்தப் பொருளாதார அமைப்பிற்கு எதிரான போராட்டமாகும்.

சில சமூக வலைதளங்களில் மத அடிப்படையிலான மோதல்கள் அல்லது யூதக் கடைகள் மட்டும் குறிவைக்கப்படுவதாகப் பரப்பப்படும் தகவல்களில் உண்மை இல்லை. வன்முறையாளர்கள் மதத்தைப் பாராமல் சொகுசு அங்காடிகள், வங்கிகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளையே சூறையாடியுள்ளனர். புலம்பெயர்ந்தோரும் போராட்டத்தில் பங்கேற்றாலும், இது ஒட்டுமொத்தப் பொருளாதார அமைப்பிற்கு எதிரான மக்களுக்கான போராட்டமாகும்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT