பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன்

 
உலகம்

ஹார்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்தை மீட்கும் பணிக்கு பிரான்ஸ், இங்கிலாந்து தலைமை தாங்கும்: மேக்ரன் அறிவிப்பு

வெற்றி மயிலோன்

பாரிஸ்: மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பாதுகாப்பான மற்றும் தடையற்ற கப்பல் போக்குவரத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு பன்னாட்டு முயற்சிக்கு பிரான்ஸும், இங்கிலாந்தும் இணைந்து தலைமை தாங்கும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் மோதலுக்கு, ராஜதந்திர வழிகள் மூலம் விரைவாகவும், வலிமையாகவும், நீடித்த தீர்வையும் காண அனைத்து முயற்சிகளையும் எடுப்போம். அத்தகைய ஒரு தீர்வு, அந்தப் பிராந்தியத்தில் உள்ள அனைவரும் அமைதியுடனும் பாதுகாப்போடும் வாழ்வதற்கு வழிவகுக்கும் ஒரு வலுவான கட்டமைப்பை வழங்க வேண்டும்.

          

இந்த முயற்சியின் மூலம், அனைத்து முக்கியப் பிரச்சினைகளுக்கும் நீடித்த தீர்வுகள் காணப்பட வேண்டும்.

ஈரானின் அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைச் செயல்பாடுகள், அந்தப் பிராந்தியத்தில் அது ஏற்படுத்தும் ஸ்திரத்தன்மையற்ற சூழல், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத் தடையற்ற மற்றும் சுதந்திரமான கப்பல் போக்குவரத்தை இயன்றவரை விரைவாக மீட்டெடுக்க வேண்டிய அவசியம் ஆகியவை மட்டுமின்றி, லெபனானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு முழு மரியாதை அளிக்கும் வகையில், அந்நாடு மீண்டும் அமைதிப் பாதையில் திரும்புவதை உறுதி செய்ய வேண்டிய அவசியமும் இதில் அடங்கும்.

இந்த மோதல் தொடங்கிய முதல் நாளிலிருந்தே தொடர்ந்து முயன்று வருவதைப் போலவே, இப்போதும் தனது முழுப் பங்களிப்பை வழங்க பிரான்ஸ் தயாராக உள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தைப் பொறுத்தவரை, வரும் நாட்களில் இங்கிலாந்துடன் இணைந்து நாங்கள் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்யவுள்ளோம்.

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்துச் சுதந்திரத்தை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்ட, அமைதி சார்ந்த ஒரு பன்னாட்டுப் பணியில் எங்களுடன் இணைந்து பங்களிக்கத் தயாராக இருக்கும் நாடுகளை இம்மாநாடு ஒன்றிணைக்கும்.

இந்த மோதலில் ஈடுபட்டுள்ள போரிடும் தரப்பினரிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட, தற்காப்பு நோக்கத்தை மட்டுமே கொண்ட இப்பணியானது, சூழ்நிலைகள் அனுமதித்த உடனேயே, களத்தில் செயல்படுத்தப்படத் திட்டமிடப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ராணுவம், ஈரான் துறைமுகங்களுடன் தொடர்புடைய கடல்வழிப் போக்குவரத்திற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்ததுடன், ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகையிடப்படும் என அறிவித்ததை தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்துள்ள பதற்றத்துக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

SCROLL FOR NEXT