டமாஸ்கஸ்: சிரியா முன்னாள் அதிபர் ஆசாத்துக்கு அந்த நாட்டு நீதிமன்றம் நேற்று மரண தண்டனை விதித்தது.
மேற்கு ஆசிய நாடான சிரியாவின் மக்கள் தொகையில் 74 சதவீதம் பேர் சன்னி முஸ்லிம்கள். 13 சதவீதம் பேர் ஷியா முஸ்லிம்கள். கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை சிரியாவின் அதிபராக பஷார் அல் ஆசாத் பதவி வகித்தார். ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த அவருக்கு எதிராக கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பரில் சன்னி கிளர்ச்சிப் படைகள் போராட்டம் நடத்தி் ஆட்சியைக் கைப்பற்றின. அதிபர் ஆசாத் குடும்பத்துடன் ரஷ்யாவுக்கு தப்பியோடிவிட்டார்.
சிரியாவின் உள்நாட்டுப் போர் குறித்து சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தி நேற்று தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில் கூறியிருப்பதாவது: முன்னாள் அதிபர் ஆசாத் தனது ஆட்சிக் காலத்தில் அப்பாவிகள் பலரை கொன்று குவித்துள்ளார். 15 வயதுக்கு உட்பட்ட சிறாரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளனர்.
ஆசாத் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் உறுதி செய்யப்பட்டு இருப்பதால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அவரது தம்பி மெஹர் அல் ஆசாத், ராணுவ மூத்த தளபதி அதெப் நஜிப் உட்பட 7 முன்னாள் அதிகாரிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னாள் ராணுவ மூத்த தளபதி அதெப் நஜிப் மட்டுமே சிரியா தலைநகர் டமாஸ்கஸில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். மற்ற 8 பேரும் ரஷ்யாவில் தஞ்சமடைந்து உள்ளனர். எனவே அதேப் நஜிபுக்கு மட்டும் விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று சிரியா அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.