பிரேசில் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனரோ
பிரேசிலியா: வீட்டுக் காவலில் இருந்த பிரேசில் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனரோ இப்போது அந்நாட்டின் ஃபெடரல் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
வலதுசாரி தலைவரான ஜெய்ர் போல்சனரோ, கடந்த 2022 தேர்தலில் இடதுசாரி தலைவர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவிடம் தோல்வி அடைந்தார். எனினும், ஆட்சியில் நீடிக்க சதித் திட்டம் தீட்டியதாகவும், இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்றும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் கடந்த செப்டம்பரில் தீர்ப்பளித்த பிரேசில் நீதிமன்றம், ஜெய்ர் போல்சனரோவுக்கு 27 ஆண்டுகள் 3 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
எனினும், ஜெய்ர் போல்சனரோ மேல்முறையீடு செய்ய 100 நாட்கள் கால அவகாசம் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுவரை அவர், மேல்முறையீடு செய்யாததால் அவருக்கு எதிராக நீதிமன்றம் இன்னும் கைது உத்தரவை பிறப்பிக்கவில்லை.
அதேநேரத்தில், தனக்கு எதிரான குற்றவியல் வழக்கை நிறுத்த ஜெய்ர் போல்சனரோ அமெரிக்க தலையீட்டை நாடியதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து அவர் கடுமையான கட்டுப்பாடுகளுடன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
வீட்டுக்காவலில் உள்ளபோது சமூக ஊடகங்களைப் பயன்படுத்த அவருக்கு தடை விதிக்கப்பட்டது. அதேநேரத்தில், அரசியல் ரீதியாக நண்பர்களைச் சந்திக்க அவர் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அந்நாட்டின் ஃபெடரல் போலீசார் அவரை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர்.
உடல் ரீதியாக தனக்குள்ள பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி, தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க நீதிமன்றத்தில் ஜெய்ர் போல்சனரோ அனுமதி கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு பிரச்சாரத்தின்போது, அவரது வயிற்றில் ஒருவர் கத்தியால் குத்தினார். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெய்ர் போல்சனரோவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது நினைவுகூரத்தக்கது.