உலகம்

ஓமன் விமானிக்கு இஸ்ரேல் அனுமதி கிடைத்தது எப்படி? - ‘ஃப்ளை துபாய்’ விமான சம்பவம் எழுப்பும் கேள்விகள்

போத்தி ராஜ்.க

விமானத்தில் ஏறும் ஒவ்வொரு பயணமும் ‘பாதுகாப்பானது’ என்ற நம்பிக்கையில்தான் பயணிகள் தங்கள் பயணத்தைத் தொடங்குகிறார்கள். ஆனால், அந்த நம்பிக்கையை உடைக்கும் வகையில் காக்பிட் கதவுக்குப் பின் ஒரு தாக்குதல் நடந்தால், அது சர்வதேச வான்வழிப் பாதுகாப்பில் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

குறிப்பாக, ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானிக்கு இஸ்ரேல் செல்ல அனுமதி கிடைத்தது எப்படி என்ற பாதுகாப்புக் குறைபாடு ஒருபுறம், விமானிகளின் மனநலம் பற்றிய கேள்விகள், பின்புல ஆய்வு ஆகியவை தொடர்பாகப் பல்வேறு பாதுகாப்புச் சார்ந்த தீவிர கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

துபாயிலிருந்து இஸ்ரேல் நோக்கிப் பறந்த ‘ஃப்ளை துபாய்’ விமானத்தில் நிகழ்ந்த காக்பிட் தாக்குதல் சம்பவம், சர்வதேச வான்வழிப் பாதுகாப்பில் பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளன. இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாரை ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி தாக்கிய பின்னணி என்ன? வெறும் காக்பிட் மோதல் தானா? - இத்தகைய பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

விமானத்தில் நடந்தது என்ன?

துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு, ‘ஃப்ளை துபாய்’ நிறுவனத்தின் சார்பில் போயிங் 737 மேக்ஸ் 8 (FZ1073) விமானம் புறப்பட்டது. இதில் 27 குழந்தைகள் உட்பட 174 பயணிகள் இருந்தனர். பயணிகளில் பெரும்பாலானோர் இஸ்ரேலியர்கள். விமானத்தை இந்திய விமானி ஸ்மித் மச்சார் இயக்க, ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானியும் உடன் இருந்தார்.

34,000 அடி உயரத்தில் விமானம் பறந்தபோது, இருவருக்கும் இடையே கடுமையான கைகலப்பு ஏற்பட்டது. இதனால் விமானம் அடுத்த 2 நிமிடங்களில் 17,000 அடிக்கு அதிவேகமாகத் தாழ்ந்தது. ஓமன் துணை விமானி விமானத்தைத் தரையில் மோதச் செய்யத் திட்டமிட்டிருந்தார். அதை இந்திய விமானி ஸ்மித் மச்சார் தடுத்தபோது, துணை விமானி சிறிய கத்தியால் அவரைக் குத்தி காக்பிட் அறையைக் கைப்பற்ற முயன்றார்.

காயங்களுடன் ஸ்மித் மச்சார், காக்பிட் கதவைத் திறந்து துணை விமானியை வெளியே தள்ளினார். பயணிகள் மற்றும் பணியாளர்களின் உதவியுடன் துணை விமானி பிடிக்கப்பட்டார். பின்னர் விமானம் சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டு, தாக்குதல் நடத்தியவர் சவுதி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்திய விமானி ஸ்மித் மச்சார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இப்போது அவரின் உடல்நிலை சீராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீவிரவாதத் தாக்குதல் முயற்சியா?

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறுகையில், “இது ஜிஹாதியத் தீவிரவாதத் தாக்குதலுக்கான முயற்சியாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம். இது தொடர்பான முழுமையான விசாரணை நடைபெறுகிறது” என்றார்.

வணிக ரீதியான விமானங்களை இயக்கும் விமானிகளுக்குத் தற்போது நடைமுறையில் உள்ள பாதுகாப்புச் சோதனைகள் போதுமானதாக உள்ளனவா? பயணிகள் நம்பியிருக்க வேண்டிய விமானக் குழுவினரிடமிருந்தே அச்சுறுத்தல் ஏற்பட்டால் என்ன செய்வது என்பன போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

ஒரு நிமிடத்தில் 4,000 மீட்டர் வீழ்ச்சி

காக்பிட் மோதலின்போது, திடீரென ஒரு நிமிடத்தில் சுமார் 4,000 மீட்டர் (13,000 அடி) அளவுக்கு விமானம் கீழே இறங்கியதால் பயணிகளிடையே மிகுந்த அச்சமும் படபடப்பும் ஏற்பட்டது.

இதுபோன்ற சூழலில் அவசர ஆக்ஸிஜன் முகமூடிகள் தானாகவே கீழே வர வேண்டும். ஆனால், இச்சம்பவத்தில் அவசர ஆக்ஸிஜன் முகமூடிகள் கீழே வரவில்லை என்று பயணிகள் தெரிவித்தனர்.

2001 இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பின் காக்பிட் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. வணிக ரீதியான அனைத்து விமானிகளுக்கும் மருத்துவ மற்றும் மனநலப் பரிசோதனைகள் கட்டாயம்.

குறிப்பாக, ஆஸ்திரேலியாவில் விமானி பயிற்சி பெற்றவர், அதற்கான உரிமத்தைப் பெறும்போது, அவரின் குடும்பப் பின்னணி மற்றும் தனிப்பட்ட பின்னணி ஆகியவை விசாரிக்கப்பட்டு, அதில் மனநிறைவு ஏற்பட்டால்தான் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

ஆனால், பின்னணிச் சரிபார்ப்பு என்பது ஒவ்வொரு நாட்டின் விதிகளுக்கு ஏற்ப மாறுபடுகிறது. பெரும்பாலும் இந்தச் சரிபார்ப்புகள், குற்றப் பின்னணி உள்ளவரா என்பதோடு முடிந்துவிடுகின்றன. அத்தகைய குற்றப் பின்னணி ஏதுமில்லாத நிலையிலும் கூட, அந்த நபர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடும் என்பதைத் தீர்மானிக்கத் தேவையான தகவல்களும் விதிகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், பெரும்பாலான நாடுகளில் பின்னணிச் சரிபார்ப்பு குற்றப் பின்னணியோடு முடிந்துவிடுகிறது. குற்றப் பின்னணி இல்லாத நபரால் ஏற்படும் அச்சுறுத்தலைக் கண்டறியப் போதிய விதிகள் இல்லை.

2015-இல் ஜெர்மன்விங்ஸ் துணை விமானி பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலையில் விமானத்தை மோதச் செய்த சம்பவமும் இதற்குச் சான்றாகும். விமானியாலேயே அச்சுறுத்தல் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதில் சிறப்புப் பயிற்சிகளும் போதுமானதாக இல்லை.

ஓமன் விமானிக்கு எப்படி அனுமதி கிடைத்தது?

இஸ்ரேலுக்கும் ஓமனுக்கும் இடையே தூதரக உறவு இல்லை. இஸ்ரேலுக்கு விமானங்களை இயக்கும் விமானிகள் அந்நாட்டோடு தூதரக உறவுள்ள நாடுகளின் கடவுச்சீட்டைப் பெற்றிருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், அந்தப் பட்டியலில் ஓமன் இல்லை.

ஓமன் துணை விமானி 8 மாதங்களுக்கு முன்புதான் ஃப்ளை துபாயில் சேர்ந்துள்ளார். புறப்படுவதற்கு முன், ஒரு நாளாக இவர் இடைவிடாது பிரார்த்தனை செய்ததாகவும், பெண்களுடன் கைகுலுக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இரு தரப்பு ஒப்பந்த விதிமுறைகளை ஃப்ளை துபாய் பின்பற்றியதா என்பதை இஸ்ரேல் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் ஆய்வு செய்கிறது.

 ‘ஜெருசலேம் போஸ்ட்’ செய்தியின்படி, இஸ்ரேலுக்கு விமானங்களை இயக்கும் விமானிகள் இஸ்ரேலுடன் தூதரக உறவுகளைக் கொண்ட நாடுகளின் பாஸ்போர்ட் பெற்றிருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், அந்தப் பட்டியலில் ஓமன் இல்லை.

ஐக்கிய அரபு அமீரக விமான நிறுவனத்தில் பணிபுரியும் ஓமன் நாட்டு விமானி, சர்வதேச வழித்தடங்களில் விமானங்களை இயக்க உரிமை பெற்றிருக்கலாம். ஆனால், இஸ்ரேலுக்கான இரு தரப்பு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குடியுரிமை நிபந்தனையை ஃப்ளை துபாய் பின்பற்றியதா என்பதை இஸ்ரேலிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் ஆய்வு செய்து வருகிறது.

ஆயுதம் ‘காக்பிட்’டுக்குள் வந்தது எப்படி?

விமானப் போக்குவரத்து விதிகளின்படி கூர்மையான பொருட்கள் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகளவில் அதிகளவிலான பாதுகாப்புச் சோதனைகளைக் கொண்ட இஸ்ரேல் வழித்தடத்தில், விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புச் செயல்பாட்டு மையத்தின் (ASOC) ஒப்புதலை மீறி ‘காக்பிட்’டுக்குள் கூர்மையான ஆயுதம் எவ்வாறு வந்தது என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT