காத்மண்டு: நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 8 பேர் பலியாகினர். பலர் மாயமாகினர். இதனையடுத்து பிஹாரில் கண்டக் மற்றும் கோசி ஆற்றங்கரையோர நிலவரங்களை கண்காணிக்கவும், தேவைப்பட்டால் பொது மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தவும் அம்மாநில தலைமைச் செயலர் அறிவுறுத்தியுள்ளார்.
நேபாள நாட்டின் வட பகுதியில் உள்ளது ரசுவா மாவட்டம். இது திபெத் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இந்நிலையில், இப்பகுதியில் இன்று திடீரேன வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் வீடுகள், வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. அதுமட்டுமல்ல பெரிய பாலங்களும் அடித்துச் செல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கங்கையின் கிளை ஆறுகளான கோசி, கண்டக் ஆறுகள் நேபாளத்திலும், பிஹாரிலும் ஓடுகின்றன. அதனாலேயே இந்த ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பிஹாரிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் இந்த வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து இன்னும் முழு வீச்சில் மதிப்பீடு செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காரணம் தெரியவில்லை:
திடீரென இத்தகைய சக்திவாய்ந்த வெள்ளப் பெருக்கு ஏற்பட என்ன காரனம் என்று ஆராய்ந்து வருவதாக நேபாள மழை, வெள்ள கணிப்பு மையம் தெரிவித்துள்ளது. ரசுவா மாவட்டத்தில் மழை பெய்திருந்தாலும்கூட அது இந்த அளவுக்கு வெள்ளப்பெருக்கை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்றும், ஒருவேளை திபெத் பகுதியில் ஏதேனும் பனிப்பாறை உருகி வெடித்து அதன்மூலம் இந்த வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதா என்பது குறித்தும் ஆய்வுகள் நடப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திபெத்திலும் பாதிப்பு:
இதற்கிடையில், திபெத்திலும் வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், சிலரைக் காணவில்லை என்றும் சீனாவில் சினுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கிராங் எல்லைப் பகுதியில் பாதிப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அப்பகுதியில் காணாமல் போனவர்களைத் தேடும்படியும், வேறேதும் பாதிப்புகள் தொடரக்கூடுமா என்பதை ஆராய்ந்து கண்காணிக்கவும் அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.
பிஹார் தலைமைச் செயலர் உத்தரவு:
பிஹாரில் தலைமைச் செயலர் பிரத்யாயா அம்ரித், காணொளிக் காட்சி மூலாம் கோசி, கண்டக் ஆறு பாயும் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். நேபாள திடீர் வெள்ளப் பெருக்கை கவனத்தில் கொண்டு ஆற்றங்கரையோரங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், தேவைப்பட்டால் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.