லாகூர்: டிக் டாக் வீடியோ எடுப்பதற்காக கூண்டிலிருந்து திறந்துவிடப்பட்ட புலி தாக்கி பண்ணை ஊழியர் உயிரிழந்த சம்பவம் பாகிஸ்தானில் நடந்துள்ளது.
பாகிஸ்தானின் லாகூர் மாகாணம் கஹ்னா என்ற கிராமத்தில் தனியார் விலங்குகள் பராமரிப்பு பண்ணை உள்ளது. இது ஒரு தனியார் விலங்கு வளர்ப்பு மற்றும் இனப்பெருக்கப் பண்ணை.
இந்நிலையில் இப்பகுதியைச் சேர்ந்த டிக்டாக் பிரபல மான நோமன் ஹாசன் என்பவர் சாகச வீடியோ எடுப்பதற்காக, கூண்டில் அடைக்கப்பட்டிருந்த புலியை வேண்டுமென்றே வெளியே திறந்துவிட்டுள்ளார்.
கூண்டிலிருந்து வெளியே வந்த புலி திடீரென கட்டுப்பாட்டை இழந்து, அங்கிருந்த 19 வயதான பண்ணை ஊழியர் தல்ஹாவைக் கடித்துக் குதறியது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
பண்ணை உரிமையாளர் பயாஸ், நோமன் ஹாசன் கைது செய்யப்பட்டுள்ளனர். கூண்டிலிருந்து தப்பியோடிய புலியும் பிடிபட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, “டிக் டாக் வீடியோ மீது மக்களுக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. பொழுதுபோக்கு அல்லது கேளிக்கை என்ற பெயரில் மனித உயிரைப் பணயம் வைக்க யாரையும் அனுமதிக்க முடியாது” என்று தெரிவித்தனர்.