உலகம்

"வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்" - கிரீன்லாந்து விவகாரத்தில் ட்ரம்ப்புக்கு ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை

மோகன் கணபதி

பிரஸ்ஸல்ஸ்: கிரீன்லாந்து விவகாரத்தில் டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக நடந்து கொள்வது ஆபத்தான வீழ்ச்சிப் பாதைக்கு வழி வகுக்கும் என்று ஐரோப்ப்பிய ஒன்றியம் அவரை எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கிரின்லாந்து விவகாரத்தில் அமரிக்காவின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஐரோப்பிய நாடுகளுக்க 10% கூடுதல் வரி விதிக்கப்படும் என்ற டொனால்ட் ட்ரம்ப்பின் அறிவிப்பு, அட்லாண்டிக் கடந்த உறவுகளைப் பலவீனப்படுத்தும். அதோடு, இது ஒரு ஆபத்தான வீழ்ச்சிப் பாதைக்கு வழிவகுக்கும் அபாயத்தை ஏற்படுத்தும். ஐரோப்பா ஒற்றுமையாகவும், ஒருங்கிணைந்தும், அதன் இறையாண்மையைக் காப்பதில் உறுதியுடனும் இருக்கும்," என்று தெரிவித்துள்ளனர்.

இந்தக் கூட்டமைப்பின் உயர்மட்டத் தூதர் காஜா கல்லாஸ், "அமெரிக்காவின் வரி விதிப்புகள் அட்லாண்டிக்கின் இருபுறமும் உள்ள செழிப்பைப் பாதிக்கும். ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் ஏழ்மையாக்கும் அபாயத்தை இவை ஏற்படுத்தும். உக்ரைனில் ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டுவரும் அதன் முக்கியப் பணியிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் கவனத்தைத் திசைதிருப்பும். கிரீன்லாந்தின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டால், அதை நாங்கள் நேட்டோவுக்குள் தீர்க்க முடியும்.

சீனாவும் ரஷ்யாவும் இதைக் கண்டு கொண்டாட்டத்தில் இருக்கும். நட்பு நாடுகளிடையே ஏற்படும் பிளவுகளால் அவர்கள்தான் பயனடைகிறார்கள்" என்று எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அமெரிக்காவின் வரி விதிப்பு மிரட்டல் குறித்து விவாதிக்க, ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளின் தூதர்கள் இன்று கூடுகின்றனர்.

முன்னதாக கடந்த 14ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘தேசிய பாதுகாப்பு நோக்கங்களுக்காக அமெரிக்காவுக்கு கிரீன்லாந்து தேவை. நாங்கள் கட்டியெழுப்பும் கோல்டன் டோம் திட்டத்துக்கு இது மிகவும் முக்கியமானது. கிரீன்லாந்தை அமெரிக்கா பெறுவதற்கு நோட்டோவே முன்னின்று வழிநடத்த வேண்டும். நாம் அதைச் செய்யாவிட்டால், சீனாவோ அல்லது ரஷ்யாவோ அதைச் செய்துவிடும். அது நடக்கவே விடக்கூடாது.

ராணுவ ரீதியாக, அமெரிக்காவின் மகத்தான சக்தி இல்லாமல், அதில் பெரும்பாலானவற்றை நான் எனது முதல் பதவிக் காலத்தில் உருவாக்கினேன். இப்போது அதை (கோல்டன் டோம் திட்டத்தை) ஒரு புதிய மற்றும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்கிறேன். நேட்டோ ஒரு பயனுள்ள சக்தியாகவோ அல்லது தடுப்பு சக்தியாகவோ இருக்காது. நிச்சயம் ஒருபோதும் இருக்காது. அது அவர்களுக்கும் தெரியும்.

அமெரிக்காவின் கைகளில் கிரீன்லாந்து இருக்கும்போது நேட்டோ மிகவும் வலிமையானதாகவும் பயனுள்ளதாகவும் மாறும். அதைவிடக் குறைவான எதுவும் ஏற்றுக்கொள்ள முடியாதது.’’ என தெரிவித்திருந்தார்.

எனினும், டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, யுனைடெட் கிங்டம், நெதர்லாந்து, பின்லாந்து ஆகிய நாடுகள் அமெரிக்க அதிபரின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, டிரம்ப் நேற்று வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், "கிரீன்லாந்தை முழுமையாகவும் மொத்தமாகவும் வாங்குவதற்கான ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எட்டு ஐரோப்பிய நாடுகளின் பொருட்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் கூடுதலாக 10% இறக்குமதி வரி விதிப்பேன். ஜூன் 1 முதல் இந்த வரி விகிதம் 25% ஆக உயரும் என்று கூறி இருந்தார்" என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT