‘விக்கி லீக்ஸ்’, ‘பனாமா லீக்ஸ்’ என்று இந்த உலகம் பல்வேறு ஆவணக் கசிவுகளைக் கண்டுள்ளது. அவையெல்லாம் அரசியல், சொத்து விவரங்கள் தொடர்பானதாகவே இருந்துள்ளன. ஆனால், ‘எப்ஸ்டீன் லீக்ஸ்’ அல்லது ‘எப்ஸ்டீன் ஃபைல்ஸ்’ என்ற ஆவணம் அமெரிக்காவின் முன்னாள், இந்நாள் அதிபர்கள், அரசியல் புள்ளிகள், பிரிட்டன் இளவரசர், டெக் ஜாம்பவான்கள் எனப் பலரின் பெயரையும் தன்னகத்தே உள்ளடக்கியுள்ளது.
தங்களின் சமூக அந்தஸ்தையும், அதற்குத் தேவையான தார்மிக ஒழுக்கத்தையும் தாண்டி, கடத்தி பாலியல் தொழிலுக்குள் தள்ளப்பட்ட சிறுமிகள், பெண்களுடன் உறவில் ஈடுபட்டதால் பெருந்தலைகள் பலர் இந்த ஆவணங்கள் மூலம் அம்பலப்பட்டுள்ளனர்.
யார் இந்த எப்ஸ்டீன்?
அமெரிக்காவில் ஒரு சாதாரண பள்ளி ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர்தான் இந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன். பின்னாளில் ஆள்கடத்தலில் ஈடுபட்டு மிகப் பெரிய பாலியல் இடைத்தரகரானார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு வர்ஜீனியா கிஃபர் என்ற அமெரிக்க பெண், பிரிட்டனைச் சேர்ந்த கிஷ்லெய்ன் மேக்ஸ்வெல் என்பவர் மீது ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்ற பாலியல் தொழில் இடைத்தரகருடன் சேர்ந்து கிஷ்லெய்ன் பாலியல் தொழிலுக்காக ஆள் கடத்தலில் ஈடுபட்டார் என்று கூறியிருந்தார். தானும் அவ்வாறாக பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார். மேலும், 1999 முதல் 2022 வரை பாலுறவில் ஈடுபடும் வயதை எட்டாத தன்னை பலருடனும் கட்டாயப்படுத்தி உறவில் ஈடுபட வைத்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டு தான் எப்ஸ்டீனை சிறையில் தள்ளியது. அப்போதே பல பிரபலங்களின் பெயரும் அடிபட்டது.
ஜெஃப்ரி எப்ஸ்டீன்
இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த எப்ஸ்டீன், கடந்த 2019-ல் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவர் மீதான வழக்குகள் கைவிடப்பட்டன. எனினும், இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து ஃபைல்களையும் வெளியிடுமாறு ஜனநாயக மற்றும் குடியரசு கட்சியினர் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, அந்த ஃபைல்களை வெளியிடும் மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது.
30 லட்சம் பக்கங்கள்...
ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான 30 லட்சம் பக்கங்கள் கொண்ட ரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் இடம்பெற்றுள்ள சில பிரபலங்கள், ஜெஃப்ரியை தங்களுக்குத் தெரியாது என்று கூறி வந்தனர். ஆனால், மின்னஞ்சல்கள், கடிதங்கள் மற்றும் பயணப் பதிவுகள் உள்ளிட்டவை அடங்கிய இந்தப் புதிய ஃபைல்கள், எப்ஸ்டீன் தண்டிக்கப்பட்ட பிறகும் பலருடன் தொடர்பில் இருந்ததை உறுதிப்படுத்துகின்றன.
இதில் தொழிலதிபர் எலான் மஸ்க், அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் மற்றும் பிரிட்டன் தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன், இளவரசர் ஆண்ட்ரூ, அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
கசியும் இ மெயில்கள்:
எப்ஸ்டீனுடன் எலான் மஸ்க் சில மின்னஞ்சல்களைப் பரிமாறிக்கொண்டதை ஆவணங்கள் காட்டுகின்றன. 2012-ல் ஒரு மின்னஞ்சலில், "உன் தீவில் எந்த நாளில் மிகவும் உற்சாகமான பார்ட்டி நடக்கும்?" என்று மஸ்க் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், தான் ஒருபோதும் அந்தத் தீவுக்குச் செல்லவில்லை என்றும், எப்ஸ்டீன் தன்னை அழைக்க முயன்றபோது மறுத்துவிட்டதாகவும் மஸ்க் சமூக வலைதளங்களில் விளக்கம் அளித்துள்ளார்.
எப்ஸ்டீனை 'அருவருப்பானவர்' என்று கூறிய அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக், 2012-ல் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் எப்ஸ்டீனின் தீவுக்குச் செல்ல மின்னஞ்சல் மூலம் திட்டமிட்டது தெரியவந்துள்ளது.
பிரிட்டன் கோடீஸ்வரரான ரிச்சர்ட் பிரான்சன், எப்ஸ்டீனுடன் கிண்டலாகப் பேசிக்கொண்ட மின்னஞ்சல்கள் கிடைத்துள்ளன. ஆனால் இது முற்றிலும் வணிகம் சார்ந்தது என்று அவரது குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இளவரசர் ஆண்ட்ரூ எப்ஸ்டீனை பக்கிங்ஹாம் அரண்மனைக்கு விருந்துக்கு அழைத்ததும், எப்ஸ்டீன் அவருக்கு ஒரு ரஷ்யப் பெண்ணை அறிமுகப்படுத்த முயன்றதும் தெரியவந்துள்ளது.
அதேபோல் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸின் பெயரும் இதில் இடம்பெற்றுள்ளது. பில் கேட்ஸுக்கு எப்ஸ்டீன் அனுப்பிய மின்னஞ்சல் ஒன்றும் இணையத்தில் கசிந்து வருகிறது.
மேலும், இந்தப் புதிய ஆவணங்களில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பெயர் ஆயிரக்கணக்கான முறை இடம்பெற்றுள்ளது. இதுபோல முன்னாள் அதிபர் பில் கிளின்டன் பெயர் எப்ஸ்டீனின் தனி விமானத்தில் பயணம் செய்ததும் தெரியவந்துள்ளது.
நீதிமன்ற ஆவணங்களில் முன்னாள் அதிபர் பில் கிளின்டன் "Doe 36" என்று ரகசிய குறியீட்டுடன் குறிப்பிடப்பட்டுள்ளார். அந்த ரகசியக் குறியீடு 50 முறை ஆவணத்தில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது.
ஆவணங்கள் நீக்கமும், நீதித் துறையின் விளக்கமும்:
எப்ஸ்டீன் ஃபைல்கள் வெளியாகி, அது பெரும் விவாதப் பொருளான நிலையில், திடீரென அவற்றை அணுக முடியாமல் போனது.
இது குறித்து அமெரிக்க நீதித் துறை பிப்.2-ல் ஒரு விளக்கத்தை அளித்தது. அதில், “ஆவணங்கள் பலவற்றில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளம் உள்ளது. தெரியாமல் அவை இடம்பெற்றிருந்தாலும், அது சரியானது அல்ல. அதனால், கடந்த ஜன.30-ல் வெளியிடப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஆவணங்களை திரும்பப்பெற்றுள்ளோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு அல்லது மனிதத் தவறுகளால் பாதிக்கப்பட்டோரின் பெயர்கள், அடையாளம் தவறுதலாக வெளியாகி இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுப்பு:
ஜெஃப்ரி எப்ஸ்டீன் மின்னஞ்சல்களில் ஒன்றில், பிரதமர் மோடி கடந்த 2017-ம் ஆண்டு இஸ்ரேலுக்கு பயணப்பட்டதில், டொனால்டு ட்ரம்ப்பின் பங்களிப்பு உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதேபோல் 2019 மக்களவை தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் மோடிக்கும், ட்ரம்ப்பின் கூட்டாளியான ஸ்டீவ் பேனனுக்கும் இடையே சந்திப்பை ஏற்படுத்த தான் தயாராக இருந்ததாகவும் எப்ஸ்டீன் கூறியுள்ளதாக தகவல். மேலும், தனக்கும், தொழிலதிபர் அனில் அம்பானிக்கும் இடையே இருந்த தொடர்புகள் குறித்தும் குறிப்பிட்டுள்ளதாக தகவல்.
இது பற்றிய சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில், வெளியுறவு அமைச்சகம் கடந்த சனிக்கிழமை அளித்த விளக்கத்தில், ‘ஒரு குற்றவாளியிடமிருந்து வெளிப்பட்ட அபத்தங்கள்’ என்று கூறியது. வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “எப்ஸ்டீன் ஃபைல்ஸ் என்று சொல்லப்படும் ஆவணங்களில் இருந்த பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம் குறித்த சில இ-மெயில் தகவல்களை நாங்கள் ஆராய்ந்தோம். ஜூலை 2017-ல் பிரதமர் மோடி இஸ்ரேல் பயணம் செய்தார் என்பதைத் தவிர, அதில் இடம்பெற்றுள்ள மற்ற அனைத்துமே ஒரு குற்றவாளியிடமிருந்து வெளிப்பட்ட அபத்தங்கள். கடும் கண்டனங்களோடு புறந்தள்ளப்பட வேண்டியவை” என்றார்.
இருப்பினும் எப்ஸ்டீன் ஃபைல்ஸ் ஏற்கெனவே இந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தத் தொடங்கிவிட்டது. இந்த மாத இறுதியில் பிரதமர் மோடி இஸ்ரேல் செல்லும் திட்டம் இருக்கும் சூழலில், இந்த ஆவணக் கசிவு இப்போது நாடாளுமன்றத்திலும் எதிரொலிக்கிறது.
பாஜக எதிர்வினை: ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஃபைல்ஸ் குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பித்ரா கூறுகையில், “ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஃபைல்ஸ் சந்தேகத்துக்குரியவை. அதிலும், அந்த மெயிலை எடுத்து காங்கிரஸ் அதில் சில திருத்தங்களைச் செய்து கசியவிட்டுள்ளது அந்தக் கட்சியின் மோசடித் தன்மையையே காட்டுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
மோடிக்கும் ‘நெருக்கடி’ என ராகுல் காந்தி கூறியது ஏன்?
இந்நிலையில், மக்களவையில் இன்று (பிப்.3) நடைபெற்ற விவாதத்தின்போது எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடி மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். அவையில் ராகுலின் பேச்சு கடும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
வெளியே வந்த ராகுல் காந்தி பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பிரதமர் நரேந்திர மோடி நாட்டை விற்றுவிட்டார். பிரதமர் மோடி ஜி கலக்கமடைந்துள்ளார். கடந்த சில மாதங்களாக முடங்கிக் கிடந்த அமெரிக்க - இந்திய வர்த்தக ஒப்பந்தத்தில் நரேந்திர மோடி நேற்று இரவு கையெழுத்திட்டார். அவர் மீது கடுமையான அழுத்தம் உள்ளது. இதனால், நரேந்திர மோடியின் பிம்பம் சேதமடையக்கூடும்.
அவைக்கு வெளியே ராகுல் காந்தி
இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், நமது பிரதமர் சமரசத்துக்கு உள்ளாகியுள்ளார். இதைப்பற்றி மக்கள் சிந்திக்க வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி சமரசத்துக்கு உள்ளாகியிருப்பதால், இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் விவசாயிகளின் கடும் உழைப்பை விற்றுவிட்டார். அவர் நாட்டை விற்றுவிட்டார். பிரதமர் நரேந்திர மோடி பயப்படுகிறார், ஏனென்றால் அவருடைய பிம்பத்தை உருவாக்கியவர்களே இப்போது அந்த பிம்பத்தை உடைக்கின்றனர். தொழிலதிபர் அதானி மீது அமெரிக்காவில் ஒரு வழக்கு உள்ளது. அது உண்மையில் பிரதமர் மோடி மீதான வழக்குதான்.
எப்ஸ்டீன் ஃபைல்களில் அமெரிக்கா இன்னும் வெளியிடாத பல விஷயங்கள் உள்ளன. அதன் காரணமாகவும் அழுத்தங்கள் உள்ளன. இவைதான் அந்த இரண்டு அழுத்த புள்ளிகள் என்று நம்புகிறேன். இதை நாடு புரிந்துகொள்ள வேண்டும். அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை மகிழ்விக்கவும், சமாதானப்படுத்தவும் அவரிடம் முழுமையாக சரண் அடைந்து விட்டார் மோடி” என்று ராகுல் காந்தி கூறினார்.
உலக வரலாற்றில் போர்ப் பதற்றங்கள் தான் எப்போதும் புவி அரசியலிலும், அதன் நீட்சியாக பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். ஆனால், முதன்முறையாக ஓர் ஆவணக் கசிவு பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்குமென்றால் அது ‘எப்ஸ்டீன் லீக்ஸ்’ என்றால் அது மிகையாகது.