டாக்கா: வங்கதேசத்தில் பெரிய அளவிலான மதவாத வன்முறைகள் எதுவுமின்றி, சமீப ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகச்சிறப்பாகத் துர்கா பூஜை திருவிழா நிறைவடைந்துள்ளது. தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) அரசு பதவியேற்ற பிறகு நடைபெற்ற முதல் துர்கா பூஜை இதுவாகும்.
“சமீபகால நினைவுகளில் இதுவே மிகச்சிறந்த துர்கா பூஜை” என்று அந்நாட்டு இந்து சமூகத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். கடந்த 2024, 2025-ம் ஆண்டுகளில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால ஆட்சியில், இந்து கோயில்களில் சிலை உடைப்பு, இந்துக்களுக்கு எதிரான தாக்குதல் உட்பட குறைந்தது 84 வன்முறை சம்பவங்கள் பதிவாகியிருந்தன.
அதற்கு முந்தைய ஷேக் ஹசீனா ஆட்சியிலும் இத்தகைய தாக்குதல்கள் தொடர்ந்து பதிவாகி வந்தன. ஆனால் இந்த முறை, காவல் துறை, எல்லைக் காவல் படை, சிறப்பு அதிரடிப் படை அடங்கிய மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டது. விழா தொடங்குவதற்கு முன்பே படைகள் குவிக்கப்பட்டதால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன.
மேலும், பூஜைக்கான விடுமுறை நாட்கள் அதிகரிக்கப்பட்டு, கூடுதல் நிதியும் ஒதுக்கப்பட்டது. பிரதமர் தாரிக் ரஹ்மானும் அமைச்சர்களும் விழா பந்தல்களுக்கு நேரில் சென்றனர். இதனால் நாடு முழுவதும் பூஜைகள் கோலாகலமாக நடந்தன. கடந்த ஆண்டைவிட சுமார் 500 கூடுதலாகி, மொத்தம் 33,851 இடங்களில் விழா கொண்டாடப்பட்டது.