உலகம்

அபுதாபியில் அணுமின் நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்

வெற்றி மயிலோன்

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தின் அல் தஃப்ரா பிராந்தியத்தில் உள்ள பரக்கா அணுமின் நிலையத்தின் உள் சுற்றுச்சுவருக்கு வெளியே இருந்த மின்சார ஜெனரேட்டரில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால் தீ விபத்து ஏற்பட்டதாக அபுதாபி ஊடக அலுவலகம் தெரிவித்தது.

பராக்கா அணுமின் நிலையம் மீது நடந்தப்பட்ட தாக்குதலில் யாருக்கும் எந்தக் காயங்களும் ஏற்படவில்லை என்றும், கதிர்வீச்சு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அணுமின் நிலையத்தின் முக்கிய அமைப்புகள் இப்போது வழக்கமாக இயங்கி வருவதாகவும் அணுசக்தி ஒழுங்குமுறைக்கான கூட்டாட்சி ஆணையம் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான இந்த ட்ரோன் தாக்குதலுக்கு யார் பொறுப்பு என்பது குறித்து அபுதாபி ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை. இஸ்ரேல் - அமெரிக்கா மற்றும் ஈரான் மோதலின் போது, ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் பல ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி முகமை (IAEA), பராக்கா அணுமின் நிலையம் மீதான ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து கதிரியக்க அபாயங்கள் எதுவும் இல்லை என்று ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் தங்களுக்குத் தெரிவித்ததாக கூறியது. மேலும், தாங்கள் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், தேவைப்பட்டால் உதவி வழங்கத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டது.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள நிலையில், விரைவில் ஒரு சமாதான ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் மிக மோசமான நிலையை சந்திக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார். மேலும், அவர், “ஒரு உடன்பாட்டை எட்டுவதில் ஈரானுக்கு ஆர்வம் உள்ளது” என்றும் கூறினார்.

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அல் தஃப்ரா பிராந்தியத்தில் உள்ள பரக்கா அணுமின் நிலையத்தின் உள் சுற்றுச்சுவருக்கு வெளியே இருந்த மின்சார ஜெனரேட்டரில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT