வலது (முசாயேவ் ஷோட்டா)

 
உலகம்

கோடாரியால் வெட்டியதில் தலை, கைகளில் ரத்தம்: இந்திய பைலட்டின் உயிரை காப்பாற்றிய பல் மருத்துவர்

செய்திப்பிரிவு

துபாயில் இருந்து டெல் அவிவ் சென்ற ஃபிளை துபாய் விமானத்தில் கோடாரி தாக்குதலில் காயமடைந்த இந்திய தலைமை பைலட் ஸ்மித் மச்சாருக்கு, அதே விமானத்தில் பயணம் செய்த இஸ்ரேலிய பல் மருத்துவர் முசாயேவ் ஷோட்டா முதலுதவி அளித்து காப்பாற்றியது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து முசாயேவ் ஷோட்டா இஸ்ரேலிய ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:விமானத்தின் காக்பிட் அறையில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை உணர்ந்து உடனே ஓடினேன். அங்கு தலைமை பைலட் ஸ்மித் தலையிலும் கைகளிலும் கடுமையான ரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தது.

அதிக ரத்த இழப்பால் அவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்தார். விமானத்தில் இருந்த ஒரே மருத்துவர் நான்தான்.

அவருக்கு முதலுதவி செய்து அவரது ரத்தக்கசிவை நிறுத்தினேன். காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் தரையில் படுத்திருந்தபோதும், அவர் எங்களிடம் பேசினார்.

தனக்கு 39 வயது எனவும், 2 குழந்தைகள் இருப்பதாகவும் கூறினார். அவர் தொடர்ந்து இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொண்டே இருந்தார். ஒருவேளை அவரை இழந்துவிட நேரிடுமோ என்ற பயம் எனக்குள் இருந்தது.

விமானம் அவசரமாக சவுதி அரேபியாவின் தபுக் நகரில் தரையிறங்கிய பிறகு, சவுதி மருத்துவ குழுவினர் காயமடைந்த பைலட்க்கு உரிய சிகிச்சையை மேற்கொண்டனர்.

அவர் உயிர் தப்பிவிட்டார்; தற்போது அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே, சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள இந்திய தூதரகமும், ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத் தூதரகமும், பைலட் கேப்டன் ஸ்மித் மச்சாரின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளன.

SCROLL FOR NEXT