உலகம்

அமெரிக்க மாகாண ஆளுநராக முதல் கருப்பின பெண் கீஷா லான்ஸ் பாட்டம்ஸ் தேர்வு

மோகன் கணபதி

வாஷிங்டன்: அமெரிக்காவில் முதமுதலாக கருப்பின பெண் ஒருவர் ஆளுநராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜார்ஜியா மாகாண ஆளுநர் பதவிக்கு ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட கீஷா லான்ஸ் பாட்டம்ஸ், தனது வெற்றி மூலம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

அட்லாண்டாவின் முன்னாள் மேயரான இவர், இந்த தேர்தல் மூலம் குடியரசு கட்சியைச் சேர்ந்த தொழிலதிபர் ரிக் ஜாக்சனை தோற்கடித்துள்ளார்.

ஜார்ஜியா மாகாணத்தில் தொடர்ச்சியாக இரண்டு முறை ஆளுநராக குடியரசு கட்சியின் பிரைன் கெம்ப் பதவி வகித்து வந்த நிலையில், தற்போது இம்மாகாணத்தில் ஜனநாயகக் கட்சிக்கு கீஷா லான்ஸ் பாட்டம்ஸ் வெற்றியை தேடித் தந்துள்ளார்.

ஜோ பைடன் அமெரிக்க அதிபராக இருந்தபோது அவருக்கு மூத்த ஆலோசகராகவும், வெள்ளை மாளிகையின் மக்கள் தொடர்பு அலுவலக இயக்குநராகவும் இவர் பணியாற்றி உள்ளார்.

கீஷா லான்ஸ் பாட்டம்ஸ் வெற்றி பெற்ற அதே நாளின் மாலையில், மற்றொரு கருப்பின பெண் ஆளுநராக வெற்றி பெற்றார். ஸ்டேசி பிளாஸ்கெட் என்ற கருப்பின பெண், விர்ஜின் தீவுகளின் ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கீஷா லான்ஸ் பாட்டம்ஸ் மற்றும் ஸ்டேசி பிளாஸ்கெட் ஆகியோரின் வெற்றி அமெரிக்க அரசியலில் கருப்பினப் பெண்களுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது. ஜனநாயகக் கட்சியின் முக்கிய அடித்தளமாக இவர்கள் இருந்து வந்தாலும், தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உயர் பதவிகளில் இவர்களின் பங்களிப்பு மிகவும் குறைவாக இருந்து வருகிறது.

மற்றொரு முக்கிய நிகழ்வாக குடியரசு கட்சியைச் சேர்ந்த பைரன் டொனால்ட்ஸ், புளோரிடா மாகாண ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். குடியரசுக் கட்சி சார்பில் ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கருப்பின நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT